Published : 04 Jan 2018 07:36 PM
Last Updated : 04 Jan 2018 07:36 PM
பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க கோரிக்கையான 2.5 சதவீத கோரிக்கைக்கு அரசு இணங்காவிட்டால் தமிழகம் முழுதும் வேலைநிறுத்தம் நடைபெறும் என சிஐடியூ தலைவர் அ.சௌந்தராஜன் தெரிவித்தார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து அரசுடன் தொழிற்சங்கங்கள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இன்று நடக்கும் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிப்பதால் தொழிலாளர்கள் ஆங்காங்கே வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். அறிவிக்கப்படாத வேலை நிறுத்தம் பல மாவட்டங்களில் தொடங்கிவிட்டது.
இது குறித்து அமைச்சருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் அ.சௌந்தரராஜனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
பேச்சுவார்த்தை நடந்து வரும்போதே தமிழகம் முழுதும் வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளதே?
பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் சுணக்கம் உள்ளது. நாங்கள் 2.5 சதவீதம் கேட்கிறோம். அவர்கள் 2.4 சதவீதத்துக்கு மேல் தர முடியாது என்ற முடிவெடுத்து விட்டார்கள். அதனால் இந்த பிரச்சினை தோன்றியுள்ளது. இன்னும் நாங்கள் அறிவிக்கவில்லை. இது இப்படியே தொடர்ந்தால் அது வேலை நிறுத்தத்தில்தான் போய் முடியும்.
பல மாவட்டங்களில் வேலை நிறுத்தத்தில் இறங்கிவிட்டார்களே?
இன்று பேச்சுவார்த்தை நடப்பதால் நிறைய பேர் விடுப்பு எடுத்து விட்டனர். வண்டி ஓட்ட ஆள் இல்லாததால் அப்படி தோன்றுகிறது. ஆனால் தற்போதைய நிலை எனக்கு தெரியாது. இருக்கலாம். காரணம் பேச்சு வார்த்தை இழுபறி என்ற தகவல் கசிந்து அதனால் சிலர் அவசரப்பட்டு ஸ்டிரைக்கில் இறங்கி இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அறிவிக்கவில்லை.
2.5 சதவீதம் தராவிட்டால் ஸ்டிரைக் தொடங்குமா?
கட்டாயம் தொடங்கும். 2.5 சதவீதத்துக்கு ஒத்துவரவில்லை என்றால் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT