Published : 22 Dec 2023 09:30 AM
Last Updated : 22 Dec 2023 09:30 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது. இருப்பினும் பல இடங்களில் குடியிருப்புகளை சூழந்து இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் நிற்பதால் மக்கள் 5-வது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளித்தது. இடுப்பளவு முதல் கழுத்தளவு வரை தண்ணீர் தேங்கியதால் மக்கள் மிகக்கடுமையாக பாதிப்படைந்தனர்.
மழை வெள்ளம் தேங்கி 5 நாட்கள் ஆன நிலையில் மழைநீர் படிப்படியாக வடியத்தொடங்கியுள்ளது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலை, எட்டயபுரம் சாலை, ஜெயராஜ்சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து படிப்படியாக சீராக தொடங்கியுள்ளது. மேலும், மழைநீர் வடிந்த பகுதிகளில் மின்சார விநியோகமும் சீரானது.
இதேவேளையில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் தொடர்ந்து மழைநீரில் சிக்கி தத்தளிக்கிறது. தூத்துக்குடி அண்ணாநகர், மகிழ்ச்சிபுரம், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், முருகேசன் நகர், தபால் தந்தி காலனி, தேவர் காலனி, பசும்பொன் நகர், டைமண்ட் காலனி, திருவிக நகர், இந்திரா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, அம்பேத்கர் நகர், தனசேகரன் நகர், மீளவிட்டான், மடத்தூர், நிகிலேசன் நகர், கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், கோக்கூர், பாத்திமா நகர், லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் இடுப்பளவுக்கு தேங்கி நிற்கிறது.
இதேபோல் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால், முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, காலாங்கரை உள்ளிட்ட பகுதிகளும் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. கோரம்பள்ளம்- காலாங்கரை சாலை அடித்து செல்லப்பட்டதால் இந்த பகுதியில் உள்ள கிராமங்கள் மூழ்கியுள்ளன. இந்த பகுதிகளில் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் 5-வது நாளாக திண்டாடி வருகின்றனர். 5 நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் உள்ளிட்டோர் தூத்துக்குடியில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதேபோல் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பிரபாகர், கார்த்திகேயன், ஜோதி நிர்மலா, செந்தில் ராஜ், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், ஏரல், ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்களுக்குள் புகுந்த வெள்ளமும் வடிந்து வருகிறது. இதனால் படிப்படியாக மக்கள் மீண்டு வருகின்றனர். இருப்பினும் தாமிரபரணி கரையோர பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5 நாட்களாகியும் தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையே போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. கடம்பா குளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் ஆத்தூர் அருகே வரண்டியவேல் பகுதியில் சாலையில் வெள்ளம் இன்னும் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடருகிறது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் திருநெல்வேலி சென்று மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பேய்குளம், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் வழியாக செல்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து 5 நாட்களுக்கு பிறகு படிப்படியாக மீள தொடங்கியிருக்கிறது. முழுமையாக மீண்டு சகஜ நிலை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment