Published : 22 Dec 2023 09:01 AM
Last Updated : 22 Dec 2023 09:01 AM
காரைக்குடி: “இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்த கருத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்யாதது ஏன்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இதுவரை எங்களது அமைச்சர்கள் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதில்லை என திமுகவினர் கூறி வந்தனர். பொன்முடிக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, இனிமேல் அவர்களால் மக்கள் முன்பாக முகம் காட்ட முடியாது. சனிப் பெயர்ச்சியால் திமுகவுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.
அக்கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் வரும் முன் காப்போம் என்பதுபோல் மருத்துவமனையில் உள்ளார். மணலில் அரசுக்கு வருமானம் ரூ.30 கோடி என்றால், அமைச்சர் வீட்டுக்கு ரூ.4,000 கோடி சென்றுள்ளதாக அமலாக்கத் துறையினர் கூறுகின்றனர். திமுக ஆட்சியை அகற்றுவது தான் தமிழக மக்களுக்கு விடிவு காலமாக இருக்கும்.
‘இண்டியா’ கூட்டணியின் கூட்டத்தில் இந்தி தேசிய மொழி, அதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனால் இந்தியை மொழி பெயர்ப்பு செய்யுமாறு கேட்கக் கூடாது என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியபோது, அதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் ஏன் வெளி நடப்பு செய்யவில்லை? ‘இண்டியா’ கூட்டணியின் தலைவர் யார் என்று அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை. அவர்களே ஒன்றுமையாக இல்லாத போது அந்தக் கூட்டணியை பாஜக உடைக்க வேண்டிய தேவை இல்லை” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT