Published : 22 Dec 2023 05:29 AM
Last Updated : 22 Dec 2023 05:29 AM

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர். படம்: ம.பிரபு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, இருவரையும் கடந்த 2016-ல் விடுதலை செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறைகடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 19-ம் தேதி பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் எனஅறிவித்து தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக இருவரும் டிச.21-ம் தேதி (நேற்று) ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

இதையொட்டி, உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கறிஞர்கள் கூட்டத்தால் நீதிமன்ற அறை நிரம்பி வழிந்தது. பொன்முடியும், அவரதுமனைவி விசாலாட்சியும் காலை 9.50 மணிக்கு வந்து காத்திருந்தனர். நீதிபதி ஜெயச்சந்திரன் 10.30 மணிக்கு வந்தார். பொன்முடியும், விசாலாட்சியும் கைகூப்பியபடி, கண்ணீர் மல்க நின்றிருந்தனர்.

நீதிபதி: தண்டனை தொடர்பாக எதுவும் கூற விரும்புகிறீர்களா? (மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இருவரது மருத்துவ அறிக்கைகளையும் தாக்கல் செய்தார்.)

பொன்முடி: நான் நிரபராதி. எனக்கு 73 வயதாகிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். போதிய சாட்சிகள் இல்லாததால் எங்கள் இருவரையும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்,

விசாலாட்சி: நானும் நிரபராதி. எனக்கு 68 வயதாகிறது. மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, எங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

நீதிபதி: (மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்தார்.) ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(1)(இ)-ன்கீழ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி (64.90 சதவீதம்) அளவுக்கு சொத்து குவித்ததாக இருவர் மீதான குற்றச்சாட்டும் அரசு தரப்பில் சரியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், கீழமை நீதிமன்றம் இதை சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலாரூ.50 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில், இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.

நீதிபதி: தண்டனையை நிறுத்திவைக்க முடியாது. இருவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும், பொன்முடி அமைச்சர் என்பதாலும் அவர்கள் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதிக்குள் சரணடையாவிட்டால் இருவரையும் சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசாலாட்சி: (கண்கலங்கியபடி) என் கணவர் இதய நோயாளி.அவரை உடன் இருந்து கவனிக்கவேண்டி உள்ளதால், தண்டனையை குறைத்து வழங்க வேண்டும்.

நீதிபதி: பொன்முடி உயர்கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பதால் குற்றத்தின் தன்மையை பார்த்துதான் தீர்ப்பளித்துள்ளேன். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, உங்கள் குறைகளை முறையிடலாம்.

என்.ஆர்.இளங்கோ: இந்த வழக்கில் பொன்முடியின் சொத்துகளை முடக்குவது தொடர்பாக கடந்த 2011-ல் நீங்கள் (நீதிபதி ஜெயச்சந்திரன்) தமிழக சட்டத் துறை செயலராக இருந்தபோதுதான் உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள்.

நீதிபதி: அதுதொடர்பாக என்கவனத்துக்கு எதுவும் கொண்டுவரப்படவில்லை. இதை முன்பேநீங்கள் சுட்டிக்காட்டியிருந்தாலும்கூட, இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் முன்பாக நடந்த நிகழ்வு அது.

என்.ஆர்.இளங்கோ: உச்ச நீதிமன்றத்துக்கு கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஜனவரி 2-ம் தேதிதான் மேல்முறையீடு செய்ய முடியும். எனவே, சரணடையும் கெடுவை 60 நாட்களாக நீட்டிக்க வேண்டும்.

நீதிபதி: ஒருவேளை, அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமானால், மீண்டும் இந்த நீதிமன்றத்தை நீங்கள் நாடலாம்.

இவ்வாறு நீதிபதி கூறிய பிறகு, பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் நீதிமன்ற கோப்புகளில் கையெழுத்திட்டுவிட்டு, பகல் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x