Published : 22 Dec 2023 05:13 AM
Last Updated : 22 Dec 2023 05:13 AM

நெல்லை, தூத்துக்குடியில் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் குடும்ப அட்டைக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவித்தார் முதல்வர்: குமரி, தென்காசிக்கு ரூ.1,000 நிவாரணம்

தூத்துக்குடி குறிஞ்சி நகர் போல்பேட்டை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கனிமொழி எம்.பி. ஆகியோர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16-ம்தேதி இரவு முதல் 18-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதில் கடுமையாகபாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி குறிஞ்சிநகர்போல்பேட்டை பகுதியிலும், பின்னர் திருநெல்வேலிசந்திப்பிலும் வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த முதல்வர், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் 17-ம்தேதிதான் தகவல் தெரிவித்தது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அளவைவிட பலமடங்கு அதிகமாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்தது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல் சற்றே தாமதமாக கிடைத்தாலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்தது. தென் மாவட்டங்களுக்கு 10 அமைச்சர்கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். 375 மாநில பேரிடர் மீட்பு குழுவினர், 275 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கூடுதலாக 230 பேரிடர் மீட்பு படையினர், 168 ராணுவவீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 12,653 பேர் மீட்கப்பட்டு, 141 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, மீட்பு பணியில் 8 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவாரண தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த நாட்டு படகுகளுக்கு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், விசைப் படகுகளுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாகவும் நிவாரண தொகை உயர்த்திவழங்கப்படும். பயிர், கால்நடைகள், கட்டுமரங்களுக்கான நிவாரண தொகையும் உயர்த்தி வழங்கப்படும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும்.

டெல்லியில் பிரதமரை கடந்த 19-ம் தேதி சந்தித்து, சென்னை மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மனு அளித்தேன். அதில் தென் மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,000 கோடி ஒதுக்க வலியுறுத்தி உள்ளேன்.

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் பேரிடர் நிதி ரூ.1,200 கோடியாக உள்ளது. இதில் 75 சதவீதம்அதாவது ரூ.900 கோடி மத்திய அரசு வழங்கும். எஞ்சிய 25 சதவீதம் மாநில அரசு வழங்கும். மத்தியஅரசின் பங்களிப்பு தொகை 2 தவணையாக வழங்கப்படும். தற்போது மத்திய அரசு அளித்துள்ள ரூ.450 கோடி 2-வது தவணை ஆகும்.

தற்போது நிகழ்ந்துள்ளதை கடும் பேரிடர்களாக அறிவித்து மத்திய அரசு கூடுதல் தொகை ஒதுக்கபிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணநிதியாக ரூ.1,500 கோடியும், தென் மாவட்டங்களில் ரூ.500 கோடிக்கு அதிகமாகவும் செலவாகும்.டெல்லிக்கு அடிக்கடி செல்லும் ஆளுநர், மத்தியஅரசிடம் இருந்து போதிய நிதியை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x