Published : 22 Dec 2023 05:06 AM
Last Updated : 22 Dec 2023 05:06 AM
சென்னை: பொன்முடி போல 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகவும், விரைவில் அந்த வழக்குகளின் தீப்புகள் வரும் என நம்புவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
65 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்றம் ஊர்ஜிதம் செய்து, பொன்முடிக்கு தண்டனை வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பை பாஜக வரவேற்கிறது. அதிலும் குறிப்பாக, பாஜக வெளியிட்ட ‘திமுக பைல்ஸ்’ பகுதி 1-ல் நாங்கள் சில நிறுவனங்களை குறிப்பிட்டிருந்தோம். தற்போது அந்த நிறுவனங்களின் பெயர்கள் கூட நீதிமன்ற தீர்ப்பில் இருக்கிறது. அதேபோல், பொன்முடியின் இன்னொரு வழக்கின் தீர்ப்பு கூட விரைவாக வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
திமுக அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள் மீது, நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் உள்ளன. அந்த வகையில், பொன்முடி, துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், அன்பரசன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.
பொன்முடிக்கு வழங்கப்பட்டதே காலம் கடந்த தீர்ப்பு. எனவே, வேகமாக மற்ற வழக்குகளுக்கும் தீர்ப்புகள் வர வேண்டும். ஒருவர் புழல் சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இன்னொரு அமைச்சரின் மீது தீர்ப்பு வந்து அவர் பதவி இழக்கிறார்.
அடுத்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு வழக்கின் தீர்ப்புகளும் மற்றும் பொன்முடி, இன்னொரு வழக்கின் தீர்ப்பையும் எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள்.
திமுக அமைச்சரவையில் 33 சதவீத அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது. திமுக ஊழல் குற்றச்சாட்டு நாடாளுமன்ற தேர்தல் களத்தை மாற்றும். இண்டியா கூட்டணி 2024-ல் இருக்காது.
இண்டியா கூட்டணி கூட்டத்தில், நிதிஷ் குமார் இந்தியில் பேசியபோது, மொழிபெயர்ப்பு வேண்டும் என டி.ஆர்.பாலு கேட்டுள்ளார். அப்போது, நிதிஷ் குமார், மொழிபெயர்ப்புக்கு அனுமதிக்கவில்லை. மாறாக, முதல்வர் ஸ்டாலினுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் கிழக்கிந்திய கம்பெனி, மெக்காலே கல்வித்திட்டம், ஆங்கில திணிப்பு எப்படி நடந்தது என்பது குறித்து பாடம் எடுத்து அனுப்பி உள்ளார். ஆனால், அவர்கள் அமைதியாக வந்து இங்கு உட்கார்ந்திருக்கிறார்கள்.
இன்னொரு மாநிலத்தில்கூட தமிழுக்கு பிரதமர் மரியாதை கொடுத்திருக்கிறார். அப்படி இருக்க இண்டியா கூட்டணி எப்படி வெற்றிபெறும். திமுகவால் இண்டியா கூட்டணி உடையும். இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுகதான் காரணமாக இருக்கிறது.
டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை பார்த்து, தென் தமிழகத்தில் கனமழை பாதிப்பு சேதம் குறித்து அறிக்கை கொடுக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT