Published : 22 Dec 2023 05:14 AM
Last Updated : 22 Dec 2023 05:14 AM
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 31 பேர் கடந்த டிச.9 மற்றும் டிச.13 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து கடந்த 1974-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், பாக்-ஜலசந்தியில் இரு நாட்டு மீனவர்களுக்கும் மீன்பிடிக்க பாரம்பரிய உரிமை உள்ளதாக தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
111 மீனவர்கள் கொலை: ஆனால், கச்சத்தீவுக்கு செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த 1983 முதல் 2013 வரை 111 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 439 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எனவே, தற்போது இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மீனவர்களின் விடுதலைக்காக தூதரக அளவில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பிலும், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT