Published : 22 Dec 2023 06:20 AM
Last Updated : 22 Dec 2023 06:20 AM

21 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் விநியோகம்: நிவாரணம் கோரி 6 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: வெள்ள நிவாரணம் கோரி 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று வரை 21 லட்சம்பேருக்கு ரூ.6 ஆயிரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணமாக, ரூ.6 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சென்னையில் அனைத்து வட்டங்களிலும், மற்ற 3 மாவட்டங்களில் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட வட்டங்களிலும் வசிப்போருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுதவிர, மத்திய, மாநில அரசுஉயர் அதிகாரிகள், வருமான வரிசெலுத்துவோர், சர்க்கரை குடும்பஅட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிச.14-ம் தேதிமுதல் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டிச.17-ம் தேதி சென்னை வேளச்சேரியில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, 24.75 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க ரூ.1,437 கோடிஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்றுடன் டோக்கன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு, நாளை ஒருநாள் விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், நேற்றுகாலை நிலவரப்படி 21 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவாரணத் தொகை கிடைக்காத,பாதிக்கப்பட்ட மக்கள் நியாயவிலைக் கடைகளிலேயே விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். குடும்ப அட்டை இல்லாதவர்கள் வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம், சமையல் எரிவாயு இணைப்பு விவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ளதாக விண்ணப்பம் அளிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த டிச.17 முதல் நேற்று முன்தினம் வரை 6.5 லட்சத்தை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றைப் பரிசீலிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே தகுதியான பயனாளிகள் யார் என்ற பட்டியல் வெளியிடப்படாத நிலையில், தற்போது பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படுமா? யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நிவாரணம் வழங்குவதற்கான பட்டியலில் இடம்பெற்று, டோக்கன் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணத் தொகை இல்லை என்று பல பகுதிகளில் கூறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, வியாசர்பாடி எம்கேபி நகர் 15-வது குறுக்குத் தெருவில் உள்ள அமுதம் நியாயவிலைக் கடையில் டோக்கன் பெற்றுநிவாரணம் வாங்க வந்தவர்களில் பலர் நீண்ட நேரம் வரிசையில் நின்றநிலையில், பணம் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். எப்போது கிடைக்கும் என்று கேட்டபோது, `இங்கு படிவம் கொடுப்பார்கள். அதைப் பூர்த்திசெய்து தாருங்கள். வங்கிக்கணக்கில் பணம் வரும்' என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு படிவம் கொடுக்க யாரும் வராததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுதவிர, நேற்று படிவம் இல்லை என்று கூறிய பல பகுதிகளில் இன்று குறைந்த அளவே விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x