Published : 08 Jan 2018 09:50 AM
Last Updated : 08 Jan 2018 09:50 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தாலுகா சென்னை மாவட்டத்துடன் இணைந்துள்ளது. இதனால் தாம்பரம், பல்லாவரம் தாலுகாவில் கூடுதல் பகுதிகள் சேர்த்து விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.
சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகள் 2011-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. அடிப்படை வசதிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில், நிலம் தொடர்பாக காஞ்சி, திருவள்ளுர் மாவட்டத்தையே அணுகவேண்டிய நிலை இருந்தது.
நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்த உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை சென்னை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து அரசு அண்மையில் காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள சென்னை மாநகராட்சியுடன் உள்ள பகுதிகளை சென்னை மாவட்டத்துடன் இணைத்துள்ளது.
இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகா சென்னை மாவட்டத்து டன் இணைகிறது.
ஆலந்தூர் தாலுகா
ஆலந்தூர் தாலுகாவில் உள்ள நந்தம்பாக்கம், ஆலந்தூர், மீனம்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர், தலக்கனஞ்சேரி, மவுலிவாக்கம் போன்ற பகுதிகள் சென்னை மாவட்டத்து டன் இணைகிறது. மேலும் ஆலந்தூர் தாலுகா என அதே பெயர் நீடிக்கும். மேலும் ஆலந்தூர் தாலுகாவில் உள்ள மூவரசம்பேட்டை பல்லாவரம் தாலுகாவுடன் இணைக்கப்படவுள்ளது.
சோழிங்கநல்லூர் தாலுகா
சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ள உள்ளகரம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி, சீவரம் போன்ற பகுதி கள் சென்னை மாவட்டத்துடன் இணைந்து அதே சோழிங்கநல்லூர் தாலுகா என்ற பெயரிலேயே செயல்படும்.
சோழிங்கநல்லூர் தாலுகாவில் இருந்த பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்கள் தாம்பரம் தாலுகாவுடன் இணைக்கப்படவுள்ளன. அதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தாலுகாவைச் சேர்த்து மொத்தம் 13 தாலுகாக்கள் இருந்தன. தற்போது 11 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல் காஞ்சி மாவட்டத்தின் பரப்பளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தாலுகாக்களில் உள்ள பகுதிகள், அருகில் உள்ள தாம்பரம், பல்லாவரம் தாலுகாவில் சேர்க்கப்படுகின்றன.
நிர்வாகரீதியாக பணிகள்
இது ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் நிர்வாக ரீதியாக பணிகள் மேற்கொள்ளவும் 70 கிமீ தூரம் உள்ள காஞ்சிபுரம் சென்று பணிகள் மேற்கொள்ளுவதை விட 25 கிலோ மீட்டர் தூரம் உள்ள சென்னைக்குச் சென்று பணிகள் மேற்கொள்வது எளிது. பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் இதனால் பயனடைவார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT