Published : 21 Dec 2023 09:24 PM
Last Updated : 21 Dec 2023 09:24 PM

“2-வது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல” - மத்திய அரசு நிதி குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலி: "தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.21) திருநெல்வேலியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு குறித்து ஆளுநர் தெரிவித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், "ஆளுநர் வாரத்துக்கு ஒருமுறை டெல்லிக்கு சென்று வருகிறார். அப்படி போகும்போது தயவுசெய்து டெல்லியில் வாதாடி, போராடி தேவையான நிதியை வாங்கிக் கொடுத்தால் அவர்களுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருப்போம்" என்றார்.

மத்திய அரசால் கொடுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. இதுவரை மத்திய அரசிடம் இருந்து நிதி உடனே கிடைக்கும். ஆனால் இந்த மழை வெள்ளத்துக்கு இதுவரையில் நிதி எதுவும் அறிவிக்கவில்லையே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரு நீண்ட விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் சொல்லிக்கொள்கிறேன். நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நான் எதிர்பார்த்திருந்த கேள்வி அது. மத்திய அரசின் நிதிப் பங்களிப்பைப் பற்றி விளக்கம் சொல்கிறேன். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்துக்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்துக்கு ஒருமுறை மத்திய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது.

இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை மத்திய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழக அரசு ஏற்றிடவேண்டும். மத்திய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இதைத்தான் நானும் பிரதமரை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தி குறிப்பிட்டிருக்கிறேன். மனுவாகவும் கொடுத்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை.

NDRF-இல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல.

சவாலான நிதிநிலைச் சூழல் இருக்கும் போதிலும்,மத்திய அரசு இந்தக் கூடுதல் நிதி தராத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியைச் செலவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். சென்னையில் நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் 1500 கோடி ரூபாய்க்குக் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. நான் இன்று இங்கு அறிவித்துள்ள நிவாரண உதவிகளுக்கும், பணிகளுக்கும் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், குடிநீர்த் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை சீரமைப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதே நேரத்தில், இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பாக சாலைகள், மருத்துவமனைகள், பாலங்கள், மின்கட்டமைப்புகள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிக்காக தமிழக அரசு உடனடி முன்பணமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 250 கோடி ரூபாயை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன். அதோடு மேலும் தாமதமின்றி இந்த இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து மத்திய அரசு NDRF-இல் இருந்து கோரப்படுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

அப்போது தாமிரபரணி ஆற்றின் கிளை நதிகளிலிருந்து நிறைய அணைகளை திமுக அரசு கட்டியிருக்கிறது. இப்போது ஆத்தூர் முக்காணி அருகில் ஒரு அணை கட்டுவதற்கு பொதுமக்கள் விரும்புகிறார்கள். திமுக அரசு அதை நிறைவேற்றுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், "அதையெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். ஆய்வு செய்த பிறகு அதன்படி நடக்கும். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல எங்கெங்கு தேவைப்படுமோ அதற்குரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்" என்றார்.

நேரில் பிரதமரை சந்தித்தபோது, நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் ஏதும் பதில் கூறினாரா? என்ற கேள்விக்கு, "20 நிமிடம் எங்களிடம் பேசினார். எல்லாவற்றையும் விவரமாக கேட்டறிந்தார். அனைத்தையும் விவரமாக சொல்லியிருக்கிறோம். பிரதமர் உடனே கவனிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்" என்று முதல்வர் பதிலளித்தார்.

அப்போது எதிர்க் கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார், தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளை சரியாக கையாளவில்லை என்று சொல்லியிருக்கிறார் என்ற கேள்விக்கு, யார்? தூத்துக்குடி மக்களைச் சுடச் சொல்லிவிட்டு - டிவியைப் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொன்னாரே அவரா?" என்று முதல்வர் பதிலளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், கால்நடை இழப்பைச் சந்தித்திருக்கக்கூடிய மக்களுக்கும் தமிழக அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார், அதன் விவரம்:

  • இந்த மழை, வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;
  • சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்;
  • மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
  • பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகச் சேதமுற்றிருப்பின், இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;
  • மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாயிலிருந்து, 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;
  • 33,000 ரூபாயாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை, 37,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;
  • 3,000 ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;
  • சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), 32,000 ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 15 ஆயிரம் ரூபாயாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து, ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
  • அதி கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்.
  • இந்த மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x