Published : 21 Dec 2023 04:22 PM
Last Updated : 21 Dec 2023 04:22 PM

திட்டக்குடியில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்க திமுக அரசு முயற்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் புல்லூர், தொண்டங்குறிச்சி, ஆவட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. மூன்று தொழிற்பேட்டைகள் அருகருகே உள்ள நிலையில், புதிதாக 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க நினைக்கும் இந்த விவசாய விரோத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஒருசில மாதங்களுக்கு முன்பு, சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை `சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை இந்த திமுக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. அதைப் போலவே இன்று, கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் புல்லூர், தொண்டங்குறிச்சி, ஆவட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயப் பெருமக்கள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலமாக அரசு அதிகாரிகள் மேற்படி கிராமங்களில் உள்ள நிலங்களில் ஆய்வு என்ற பெயரில் வந்து செல்வது, அளவீடு செய்வது போன்றவை அப்பகுதி விவசாயிகளிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இக்கிராமங்களில், மானாவரி வகைப்பாடாக இருந்த நிலங்களை, அப்பகுதி விவசாயிகள் தங்களது ரத்தத்தை வியர்வைகளாக சிந்தி, நூறடி ஆழத்துக்கு மேல் கிணறுகள் வெட்டி, பாசன வசதி ஏற்படுத்தி, அரும்பாடுபட்டு நிலங்களை பண்படுத்தி இன்று அந்நிலங்களை முப்போகம் விளையக்கூடிய நிலங்களாக மாற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிணறுகளும், மின் மோட்டார் இணைப்புகளும் உள்ளன. மிகுந்த பொருட்செலவில் தற்போதுள்ள விவசாய கட்டமைப்புகளை உருவாக்கி, அப்பகுதி மக்கள் நல்லபடியாக விவசாயம் செய்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு முறையும் அரசு அதிகாரிகள் அவர்களுடைய விவசாய நிலங்களுக்கு ஆய்வு என்ற பெயரில் வந்து செல்லும்போதெல்லாம், விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு முப்போகம் விளையக்கூடிய நிலங்களை கையகப்படுத்தத் துடிக்கும் இந்த திமுக அரசின் மீதும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் மீதும் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, மேற்படி நிலங்களில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் வேப்பூர் வட்டம், விளம்பாவூரில் ஒரு சிட்கோ தொழிற்பேட்டை; அதனையடுத்து சுமார் 25 கி.மீ. தொலைவில் பெரம்பலூர் மாவட்டம், இறையூரில் ஒரு சிப்காட் தொழிற்பேட்டை; இவற்றுடன் சுமார் 15 கி.மீ. தொலைவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆசனூரில் ஒரு சிப்காட் தொழிற்பேட்டை என்று மூன்று தொழிற்பேட்டைகள் உள்ள நிலையில், வேண்டுமென்றே இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், திமுக அரசின் அமைச்சருமான சி.வி. கணேசன் இப்பகுதி விவசாயப் பெருமக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திட்டக்குடி வட்டத்தில் புல்லூர், தொண்டங்குறிச்சி, ஆவட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயன்று வருவதாக அப்பகுதி மக்கள் நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார்கள்; தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

உண்மையில் தொழிற்பேட்டை அமைத்து அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென்றால், ஏற்கெனவே 10 கி.மீ. தொலைவில் விளம்பாவூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையை முழு அளவுக்கு பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதாகும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, மூன்று தொழிற்பேட்டைகள் அருகருகே உள்ள நிலையில், புதிதாக 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க நினைக்கும் இந்த விவசாய விரோத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியில் மக்கள் விரோத திமுக அரசு முனைந்தால், பாதிப்படையும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும்; எனவே, இப்பகுதி விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியினை கைவிடுமாறு இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x