Published : 21 Dec 2023 03:37 PM
Last Updated : 21 Dec 2023 03:37 PM

ஏரி நீரில் மூழ்கிய கிணறு @ செங்கல்பட்டு - சுடுகாடு இருப்பதால் சுகாதார சீர்கேடு

செங்கல்பட்டு: சுடுகாட்டுக்கு அருகே ஏரி நீரில் மூழ்கிய குடிதண்ணீர் கிணற்றால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக ஆலப்பாக்கம் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர், வ.உ.சி நகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு வ.உ.சி. நகர் ஏரியில் கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்த கனமழையால் வ.உ.சி. நகர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் குடிநீர் கிணறும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மேலும், இந்த குடிநீர் கிணறு அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அப்பகுதி சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் பிணங்கள் புதைக்கப்பட்ட பகுதியும் ஏரி நீரில் முழுவதும் மூழ்கியுள்ளது. இந்நிலையில், இந்த குடிநீர் கிணற்றில் இருந்து கே.கே. நகர் மற்றும் வ.உ.சி. நகர் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ஆண்டுதோறும் மழை பெய்து ஏரி நிரம்பினால் இதேநிலை ஏற்படுகிறது. கடந்த ஒருவார காலமாக இந்த கிணற்றில் இருந்தே எங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் உருவாகும் நிலை உள்ளது. ஆகவே இந்த தண்ணீரை குடிக்காமல் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மு.முனிச்செல்வம் கூறியது: புயல் மழை நின்றுவிட்டது. ஆனாலும் இன்றைய தேதிவரை அசுத்தமான குடிநீர்தான் வருகிறது. அது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் துர்நாற்றம் வீசுவதால் அதை சமையலுக்கும், குடிக்கவும் பயன்படுத்த முடியவில்லை. ஆறு மாதத்துக்கு ஒருமுறை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து அதுகுறித்த விவரத்தை தொட்டியில் எழுதி வைக்க வேண்டும். இந்த நடைமுறை எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை. மேலும், இப்போது மட்டும் அல்ல எப்போதெல்லாம் பெருமழை வெள்ளம் வருகிறதோ அப்போதெல்லாம் இதே நிலமைதான்.

தற்போது விநியோகம் செய்யப்படும் தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக உள்ளது. எனவே, நீரை சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்ய வேண்டும். தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் அரசும், ஊராட்சி நிர்வாகமும் ஏரிக்குள் மூழ்கியிருக்கும் கிணற்றை சுற்றி ஏரிக்கரை உயரத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். சுடுகாட்டு கழிவுகள் வெளியேறாமல் இருக்க சுடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் கட்டவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது: ஏரியில் மூழ்கிய கிணற்று நீரை பயன்படுத்தவில்லை. வேறு இடத்தில் உள்ள கிணற்று நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் கலங்கலாக மட்டுமே உள்ளது. குளோரின் கலந்து குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் மூழ்கிய கிணற்று நீரை முற்றிலும் வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x