Published : 21 Dec 2023 01:25 PM
Last Updated : 21 Dec 2023 01:25 PM
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.21) தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்துள்ளது. அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் அமைச்சர் பதவி பரிபோன நிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT