Published : 21 Dec 2023 09:34 AM
Last Updated : 21 Dec 2023 09:34 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 9 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று காலையில் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
மழை வெள்ளத்தில் மூழ்கி 16 பேரும், சுவர் இடிந்து விழுந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்துள்ளனர். 20 பேரின் உடல்களும் முதலில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளதால், மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர் மூலம் அத்தியாவசிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மின்சாரம் இல்லாததால் பிணவறையில் உடல்களை பாதுகாப்பாக வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடல்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இலவச அமரர் ஊர்திகள் மூலம் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
40 இடங்களில் மீட்புப் பணியில் சிரமம்: தூத்துக்குடியில் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் கூறியது: “மத்திய ஆய்வு குழுவினர் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வின்படி இழப்பீடுகள் வழங்கப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சேதாரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. காலை வரை 9 பேர் இறந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. முழு சேதாரம், உயிரிழப்பு குறித்து தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. முழுவிவரங்கள் விரைவில் தெரியவரும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 40 இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை போன்ற பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது 10 ஹெலி காப்டர்கள் மூலம் அத்தியா வசிய பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்றார் அவர்.
ஏரல் பாலம் சேதம் - மக்கள் பாதிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததாலும், அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையோர பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தால் சூழப்பட்டு, துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன.
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஆழ்வார்தோப்பு, கருங்குளம், ஏரல், ஆத்தூர், முக்காணி, பழையகாயல், புன்னக்காயல் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், மின்சாரம், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் முடங்கிக் கிடக்கின்றனர்.
ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்டு வருகின்றனர். இருப்பினும் இன்னும் பலர் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
ஏரல் - குரும்பூர் இடையே தாமிரபரணி ஆற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்மட்ட பாலம் புதிதாக அமைக்கப்பட்டது. தற்போது இப்பாலம் சுமார் 15 அடி அகலத்துக்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. ஏரல் பகுதி மக்கள் மின்சாரம் இன்றியும், தகவல் தொடர்பு வசதிகள் இன்றியும் தவித்து வந்த நிலையில், பாலமும் துண்டிக்கப்பட்டதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இரு கரையோர பகுதிகளிலும் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. முறப்பநாடு, வல்லநாடு, அகரம், மணக்கரை, முத் தாலங்குறிச்சி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப் பேரை, ஆழ்வார்தோப்பு, ஏரல், குரும்பூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிசான நெல் நடவு பணிகளில் விவசாயிகள் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தனர்.
நூற்றுக்கணக்கான ஏக்கரில் நாற்றங்கால் அமைத்திருந்தனர். இந்த விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் சில பகுதிகளில் வாழை உள்ளிட்ட இதர பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருவாடு ஆலைகள் பாதிப்பு: காட்டாற்று வெள்ளத்தில் தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கருவாடு ஆலைகள் மூழ்கின. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட கருவாடுகள் நீரில் கரைந்து போயின. இதனால் கடந்த 4 நாட்களாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
மக்கள் மறியல் போராட்டம்: தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அடித்துசெல்லப்பட்ட பாலத்துக்கு அருகேதற்காலிக சாலை அமைத்து போக்குவரத்து நேற்று காலை தொடங்கப்பட்டது. ஆனால், நிவாரண உதவி கிடைக்கவில்லை எனக் கூறி கிராமமக்கள் 4 இடங்களில் தொடர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. காலை முதல் மாலை வரை சாலை மறியல் போராட்டம் நீடித்ததால் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு, தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகேயுள்ள பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே மூன்று நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் திருநெல்வேலியில் இருந்து மறவன்மடம் வரை மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அங்கிருந்து தூத்துக்குடிக்கு சுமார் 5 கி.மீ., தொலைவு மக்கள் நடந்தே வந்தனர். அதுபோல திருநெல்வேலி சென்றவர்களும் சுமார் 5 கி.மீ., தொலைவுக்கு நடந்து சென்று, அதன்பின் பேருந்துகளில் பயணித்தனர்.
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்தோணியார்புரம் பாலம் அருகே தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று காலை 9 மணி முதல் தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே போக்குவரத்து தொடங்கியது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் நிலைமை சீராகாததால், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் நேற்று காலை முதல் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வழியாக இயக்கப்பட்டன.
இந்நிலையில், காலை 10 மணியளவில் கோரம்பள்ளம் பகுதி மக்கள் சுமார் 500 பேர் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறி, கோரம்பள்ளம் அரசினர் ஐடிஐ முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் சுமார் 1 மணி நேரம்கழித்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சிறிது நேரத்தில் கோரம்பள்ளம் சந்திப்பு பகுதியில் திரண்ட அப்பகுதிமக்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதுபோல் அய்யனடைப்பு சந்திப்பு பகுதியில் அய்யனடைப்பு ஊராட்சிக்கு உட்பட்ட மக்களும், மறவன்மடம் சந்திப்பு பகுதியில் மறவன்மடம் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் போக்கு வரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இரு மார்க்கங்களிலும் வந்த பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
மாலை 4 மணியை தாண்டியும் 5 மணி நேரத்துக்கு மேலாக மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. எம்.பி., எம்எல்ஏ வரவேண்டும் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், சாலையை சீரமைத்து போக்குவரத்தை தொடங்கியும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
28 பேர் உயிரிழப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் மூழ்கி 16 பேர்,சுவர் இடிந்து விழுந்து 2 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 304 குடிசைகள் பகுதியாகவும், 206 குடிசைகள் முழுமையாகவும், 6 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் வடியாத நிலையில் சேத மதிப்பு முழுமையாக தெரியவரவில்லை. 4 மாவட்டங்களிலும் 85 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. > முழு விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்: ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT