Published : 20 Dec 2023 10:50 PM
Last Updated : 20 Dec 2023 10:50 PM
சென்னை: எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். கழிவுகளை அகற்றும் பணி நிறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக தலைநகர் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், எண்ணூர் கடல் முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் படர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் நான்கு ஏஜென்சிகள் ஈடுபட்டன. மீனவ மக்களும் இந்த பணியில் இணைந்து செயல்பட்டனர். இந்நிலையில், தற்போது எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நான்கு பகுதிகளாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியை உள்ளூர் மீனவ மக்களின் துணையுடன் சுமார் 900 பேர் மேற்கொண்டனர். இந்த பணி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான மாநில குழுவினர் மேற்பார்வையில் நடைபெற்றது.
128 படகுகள், 7 ஜேசிபி, 2 டிராக்டர்கள், 8 கல்லி சக்கர்ஸ், 6 பொக்லைன்கள், 3 ஹைட்ராக்ரான்கள், 4 பிக்கப் டிரக்குகள், 8 ஆயில் பூமர்கள், 6 ஆயில் ஸ்கிம்மர்கள் மற்றும் 15 டிப்பர்கள் இந்த பணியில் பயன்படுத்தப்பட்டன. மொத்தமாக 105.82 கிலோ லிட்டர் எண்ணெய் படர்ந்த நீர் மற்றும் 393.5 டன் எண்ணெய் கசடு அகற்றப்பட்டது. இதனை சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு, ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT