Published : 20 Dec 2023 07:32 PM
Last Updated : 20 Dec 2023 07:32 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று (டிச.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 தேதிகளில் அதி கனமழை கொட்டியது. இதனால் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அதுபோல தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஆழ்வார்திருநகரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஏரல், ஆறுமுகநேரி, ஆத்தூர், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய குழு ஆய்வு: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மழை, வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சிறப்பு குழுவை தூத்துக்குடி மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான இந்த குழுவில் மத்திய நீர்வள அமைச்சக இயக்குநர் ஆர்.தங்கமணி, வேளாண்மை கூட்டுறவு இயக்குநர் கே.பொன்னுசாமி,சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
4 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.அங்கு மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கூடுதல் ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக விரிவாக விளக்கினார்.
அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி, நடராஜர் நகர், ஆதிபராசக்தி நகர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தனர்.
2 குழுக்களாக... - தொடர்ந்து மத்திய குழு உறுப்பினர்கள் 2 குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் பகுதியில் சேதமடைந்த பாலம்,கீழ வல்லநாட்டில் தூத்துக்குடி மாநகராட்சிக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலம், கருங்குளம் பகுதியில் பயிர்கள் பாதிப்பு, வைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மற்றொரு குழுவினர் ஏரல், ஆத்தூர் பகுதியில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், புன்னக்காயலில் ஆற்றுநீர் புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள், திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளில ஏற்பட்ட சேதங்கள் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மக்களிடம் பாதிப்பு விபரங்களை குழுவினர் கேட்டறிந்தனர். மேலும், குழுவினருடன் சென்ற தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பாதிப்புகள் குறித்து குழுவினருக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.
மத்திய குழுவினர் தங்கள் ஆய்வு குறித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அளிக்கவுள்ளனர். அந்த அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். குழுவினருடன் தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களால் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த விபரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் நாளை (வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT