Published : 20 Dec 2023 05:19 PM
Last Updated : 20 Dec 2023 05:19 PM
சென்னை: குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்க்கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன பதவியில் உள்ளவர்களிடம் அவமரியாதையாக நடந்து வந்ததையும் நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த தவறான நடத்தையை இன்னும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி மக்கள் மன்றத்துக்கும் அவமானமாகும்.
மரியாதைக்குரிய குடியரசுத் துணை தலைவர் மற்றும் மாநிலங்களவை சபாநாயகரை தூற்றியும், அவமரியாதையும் செய்த ராகுல் காந்தி மற்றும் அவருக்கு துணைநின்ற இதர எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) வியாழக்கிழமை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும். அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடக்கியவர்களுக்கு எதிராக நமது கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போல நடித்துக் (மிமிக்ரி) காட்டினார். அப்போது, ராகுல் காந்தி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ஜகதீப் தன்கரை போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT