Published : 20 Dec 2023 05:11 PM
Last Updated : 20 Dec 2023 05:11 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களால் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த விபரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் நாளை (வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களால் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த விபரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், ஆதார் எண் மற்றும் தங்களைப் பற்றிய உரிய விபரங்களை அளிக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் இல்லாத பொதுமக்கள் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் தெரிவிக்கலாம். அரசின் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (டிச.21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. நிவாரண முகாம்கள் ஏதும் நடைபெறாத
கல்லூரிகள் செயல்படும். வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை குறைந்திருப்பதாலும், தாமிரபரணியில் கரைபுரண்ட வெள்ளம் வடிய தொடங்கியிருப்பதாலும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் நேற்று முன்தினம் ஆற்றுப் பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு பாய்ந்தோடிய தண்ணீர் மட்டம் நேற்று குறைந்திருந்தது. ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தி ருந்த வெள்ளம் பெருமளவுக்கு வடிந்திருக்கிறது.
வெள்ளத்தில் தத்தளித்தவர்களை மீட்கும் பணிக்காக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இருந்து நாட்டுப் படகுகளுடன் அழைத்து வரப்பட்டிருந்த மீனவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படகுகள் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை மூழ்கடித் திருந்த வெள்ளம் வடிந்து வருகிறது.
இங்கு குளம்போல் தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் வெள்ளத் தில் மூழ்கி சேதமடைந்த இருசக்கர வாகனங்களை பழுது நீக்குவதற்காக டூவீலர் ஒர்க்ஷாப்களில் ஏராளமானோர் தங்கள் இருசக்கர வாகனங்களை கொண்டு வந்திருந்தனர். இதனால் பல்வேறு இடங்களிலும் இருசக்கர வாகனங்களை பழுதுநீக்கும் பணியில் மெக்கானிக்குகள் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலி மாநகரில் வெள்ளம் வடியாத சந்திப்பு ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான இடங்களுக்கும் பேருந்து சேவை நேற்று இருந்தது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடையம் செல்லும் பேருந்து கள் சேரன்மகாதேவி சங்கன் திரடு,முக்கூடல் பொட்டல்புதூர் வழியாக கடையம் செல்கின்றன. பாபநாசம் செல்லும் பேருந்துகள் வழக்கமாக செல்லும் வழித்தடமான சேரன்மகாதேவி, வீரவநல்லூர் கல்லிடைக் குறிச்சி, விக்கிரம சிங்கபுரம் வழியாக பாப நாசம் செல்கின்றன. வண்ணார்பேட்டை வடக்குப் புறவழிச் சாலையில் நீர் வடிந்து வாகனங்கள் செல்லும் வகையில் ஏதுவாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT