Published : 20 Dec 2023 04:41 AM
Last Updated : 20 Dec 2023 04:41 AM

திருவண்ணாமலையில் இருக்கைகள் இல்லாத பெரியார் சிலை பேருந்து நிறுத்தம்: தரையில் அமரும் பயணிகள்

திருவண்ணாமலை பெரியார் சிலைபேருந்து நிறுத்தத்தில் இருக்கைகள் இல்லாததால் தரையில் அமர்ந்துள்ள பயணிகள். | படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ‘பெரியார் சிலை’ பேருந்து நிறுத்தத்தில் இருக்கைகள் இல்லாமல் தரையில் பயணிகள் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரில் ‘பெரியார் சிலை’ பேருந்து நிறுத்தம் என்பது பிரதான பேருந்து நிறுத்தமாகும். சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர், செங்கம், பெங்களூரு, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி மற்றும் தண்டராம்பட்டு மார்க்கங்களில் சென்று வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பெரியார் சிலையில் நிறுத்தப்பட்டு புறப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இறங்கும் பேருந்து நிறுத்தங்களில் முக்கியமானதாகும்.

மேலும், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கடைவீதிக்கு வரும் கிராம மக்கள், விவசாய பெரு மக்கள் உள்ளிட்டோர் பெரியார் சிலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மீண்டும் வந்து வீடுகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதேபோல் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், கிழக்கு மற்றும் மகளிர் காவல் நிலையத்துக்கு வருபவர்களும் வந்து செல்கின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் வருகையும் உள்ளது.

இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள பெரியார் சிலை பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அவதிப்படுகின்றனர். பயணிகளுக்கான இருக்கைகள் இல்லை. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பு இருக்கைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இருக்கைகள் இல்லாததால் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், உடல் நலம் குன்றி யவர்கள் அவதிப்படுகின்றனர். இவர்களால் நீண்ட நேரம் நிற்க முடியாததால், தரையில் அமர்ந்து விடுகின்றனர். மழைக் காலங்களில் பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் இருப்பதால், உட்காரவும் முடிய வில்லை. பெரியார் சிலை பேருந்து நிறுத்தத்தில் இருக்கைகளை அமைத்து கொடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தான விளம்பர பதாகை... மேலும், பெரியார் சிலை பேருந்து நிறுத்தம் முன்பு அரசு மற்றும் தனியார் மூலம் விளம்பர பதாகைகள் அதிகளவில் வைக்கப்படுகின்றன. இதனால், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்துகளை பயணிகளால் கணிக்க முடியவில்லை. இதன் காரணமாக, சாலையில் உள்ள வெள்ளை நிற குறியீட்டை கடந்து வந்து நிற்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. விளம்பர பதாகை வைக்க அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்தும், அத்துமீறல்கள் தொடர்கின்றன. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, விளம்பர பதாகைகளை அகற்றிவிட்டு, மீண்டும் வைக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x