Published : 20 Dec 2023 04:18 PM
Last Updated : 20 Dec 2023 04:18 PM
புதுடெல்லி: ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக 2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது.
தமிழில் 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு மொழியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சால்வை, செப்புப் பட்டயம் அடங்கிய சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும். ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்டவரான எழுத்தாளர் தேவிபாரதி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 40 ஆண்டு காலமாக எழுத்துலகில் இயங்கி வரும் இவரது படைப்புகள், எளிய மக்களின் வாழ்வியலை அச்சுப் பிசகாமல் பிரதிபலிப்பவை. அவரது மூன்றாவது நாவல் 'நீர்வழிப் படூஉம்'.
‘நீர்வழிப் படூஉம்’நாவல் குறித்து எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய கட்டுரை மறுபகிர்வாக இங்கே... எழுத்தாளர் தேவிபாரதி முன்பு ஒருமுறை ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘தனக்கு எழுத்து என்பது வாழ்வைப் பரிசீலிப்பதற்கான செயல்பாடுகளில் ஒன்று’ என்பதாகப் பதிலளித்திருப்பார். அத்தகைய பரிசீலனையைத் தன்னுடைய சொந்த வாழ்வு சார்ந்தும், தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மீது எழுப்பியும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை முன்னிறுத்தியும் எழுதப்பட்ட ‘நீர்வழிப் படூஉம்’ நாவலின் வழியே நிகழ்த்தும்போது அதன் செறிவும் நம்பகத்தன்மையும் தன்போலே கூடிவிடுகின்றன.
எல்லோராலும் கைவிடப்பட்ட உடையாம்பாளையத்தின் மரண வீடொன்றில் நாவல் தொடங்குகிறது. அங்கே பிணமாகக் கிடத்தப்பட்டிருக்கும் காரு மாமாவே நாவலின் பிரதானப் பாத்திரம். நிம்மதியான கடைசிக் காலத்தையும் வேதனையற்ற மரணத்தையும் வேண்டாதவர் ஒருவருமிலர். அந்தக் கொடுப்பினை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. துயர் மிகுந்த கடைசிக் காலத்தை அனுபவித்து, தனியனாக இறந்துபோகும் காரு மாமாவின் நிலைக்கு என்ன காரணம்? அவரின் உற்ற சொந்தங்கள் எவரெவர்? சாவுக்கு அத்தனை பேர் கூடிய நிலையில் வாழும்போது அவர் தனித்திருக்கக் காரணம் என்ன? இப்படி அவர் வாழ்ந்த வாழ்வின் மீது அந்த மரணத் தருணத்தில் அடுக்கடுக்காய்க் கேள்விகளை எழுப்புகிறது இந்நாவல். பின்னர், புதிர்களை ஒவ்வொன்றாய் அவிழ்த்து, மேலும் பல புதிய கேள்விகளை எழுப்பிச் செல்கிறது.
காரு மாமாவின் மனைவி ராசம்மாள், ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள். போகும்போது தன் பிள்ளைகளையும் கூடவே அழைத்துச் சென்றுவிடுகிறாள். அவள் வெளியேறியதற்கான காரணம் எங்குமே விளக்கப்படுவதில்லை. அது தேவைப்படவுமில்லை. ஆனால், அது காரு மாமாவுக்குப் புரிந்திருக்கிறது. அவளின் எல்லாப் பிழைகளையும் மீறி அவளை நேசிக்கிறார். அவளுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வேண்டிக்கொள்கிறார். ராசம்மாவால் தன் சகோதரன் பட்ட துன்பம் அனைத்தையும் கண்ட பின்னரும்கூட காரு மாமாவின் சகோதரிகள் ராசம்மாவை ஏற்றுக்கொள்கிறார்கள். அவள் பிள்ளைகளை உச்சிமோந்து உருகுகிறார்கள்.
இந்நாவலில் காரு மாமாவே பிரதானப் பாத்திரம் என்றாலும் ஒப்பாரிப் பாடல்களைப் பயிற்றுவிக்கும் லிங்க நாவிதர், கண்களில் அன்பைத் தேக்கி நடமாடும் சாவித்திரி, திருமங்கலத்து அத்தையின் மூத்த மருமகன், பெரியம்மாக்கள், பிள்ளைகள் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றனர். இது இவர்கள் அத்தனை பேரும் பட்ட கதை; இதைத் தனிமனிதன் ஒருவனின் கதை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. காரு மாமாவின் வாழ்வின் ஊடாகக் குடிநாவிதச் சமூகத்தின் உள்ளார்ந்த துயரத்தைப் பேசுகிறது. கடைசி வழியனுப்புதலுக்குக்கூட அடுத்தவர் கையை நம்பியிருக்க வேண்டிய நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
வாழ்வின் அத்தனைப் படிநிலைகளிலும் வறுமையும் துயரும் நிழல்போல அவர்களைத் தொடர்கின்றன. மீளாத் துயருக்கு நடுவிலும் தங்களை ஆற்றுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர்களே தேடிக் கண்டுகொள்கிறார்கள். அதில் தமிழ்த் திரைப்படங்கள் வகிக்கும் பங்கு குறிப்பிடத் தக்கது. திரைப்படங்கள் பற்றி நாவலில் வரும் குறிப்புகள் மிக முக்கியமானவை. பீம்சிங்கின் திரைப்படங்களைக் கண்டு கண்ணீர் உகுப்பதன் வழியே தம் இடர்மிகு வாழ்வின் அழுத்தங்களைக் கொஞ்ச நேரம் இறக்கி வைத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தின் சமூக அரசியல் வரலாற்றை எழுதும் யாரொருவரும் ஏன் திரைப்படங்களை ஒதுக்கிவிட்டு எழுதிவிட முடியாது என்பதற்கான விடை இந்நாவலில் இருக்கிறது.
வாழ்க்கையைப் படைப்பில் கொண்டுவரும்போது, அதில் நிகழும் கதை, நடமாடும் மனிதர்கள், அவர்கள் புழங்கும் வெளி என இவை அத்தனையும் முக்கியம் என்றாலும் அதில் மேவி வரும் படைப்பாளியின் பார்வையே அந்தப் படைப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. வாழ்வின் தீராத் துயரங்களுக்கிடையேயும் மனிதர்களிடத்தே தூர்ந்துபோகாது நிலைத்திருக்கும் அன்பையே தன்னுடைய பார்வையாக தேவிபாரதி முன்வைக்கிறார். இதைத்தான் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, “மனிதர்களின் முரட்டுத்தனத்துக்குள்ளும் மூர்க்கமான தோற்றத்துக்குள்ளும் அவற்றின் ஆழங்களில் உலர்ந்துபோகாமல் இருக்கும் ஈரத்தைத் தொட்டுப் பார்க்கிறது” என்று பின்னட்டையில் குறிப்பிட்டுள்ளார்.
தேவிபாரதியின் முதல் நாவலான ‘நிழலின் தனிமை’ குற்றம் – தண்டனை – மன்னிப்பு என்பதற்குள் சுழலும் என்றால் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலோ அதன் தொடர்ச்சியாகக் குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என்று செல்கிறது. அவருடைய புகழ்பெற்ற ‘பலி’, ‘பிறகொரு இரவு’ போன்ற சில சிறுகதைகளிலும் இதே போன்றதொரு அடிச்சரடைக் காண முடியும். இந்நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனைத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்; அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் வாழ்வில் தங்களுக்கான ஆசுவாசத்தை நிபந்தனையற்ற மன்னிப்பின் வழியாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பின் வழியாகவும் தேடிக்கொள்கிறார்கள். நீர்வழிப் படூஉம் புணைபோல் இந்நாவல் அன்பின் வழி சேர்கிறது.
நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி
நற்றிணை பதிப்பகம்
திருவல்லிக்கேணி,
சென்னை-5.
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044 - 2848 1725
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT