Published : 20 Dec 2023 03:10 PM
Last Updated : 20 Dec 2023 03:10 PM
சென்னை: “ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அதிகாரிகள் நேற்று இரவே சென்றடைந்துவிட்டனர். அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் மூலம் அங்குள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று முதல்வர் உடனான ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து இன்று (டிச.20) காலை சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை, எழிலகத்திலுள்ள, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு சென்று அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், சேத விவரங்களையும் முதல்வருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியது: "தமிழக முதல்வர் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்கள், நகராட்சி நிர்வாகத்துறை, டான்ஜெட்கோ, நீர்வளத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து காணொளி வாயிலாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், முதல்வர் இந்த இரண்டு மாவட்டங்களின் தற்போதைய நிலை, மக்களுக்கு செய்யப்பட்டு வரும் நிவாரணப் பணிகள், உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் என்னவாக இருக்கிறது? பால் விநியோகம், மின் இணைப்பு நிலை உட்பட அனைத்து தேவைகள் குறித்து இன்றைய ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் உடன் முதல்வர் காணொளி வாயிலாக பேசி, அவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும், அவர்கள் வசிக்கும் பகுதிகளின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். நிவாரண முகாம்களில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். நேற்று இரவே ஸ்ரீவைகுண்டம் பகுதியை அதிகாரிகள் சென்றடைந்துவிட்டனர். அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் மூலம் அங்குள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10 ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது. கோவை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டது. மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு என ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கிருந்து உணவு பொட்டலங்களை ஹெலிகாப்டரில் ஏற்றி உணவுகள் விநியோகிக்கப்பட்டது. இதுவரை, கிட்டத்தட்ட 27 டன் அளவிலான உணவு மக்களுக்கு விநியோகித்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT