Last Updated : 20 Dec, 2023 03:36 PM

 

Published : 20 Dec 2023 03:36 PM
Last Updated : 20 Dec 2023 03:36 PM

“கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி தருவதில்லை” - ஆளுநர் முன்னிலையில் புதுவை அரசு செயலர்கள் மீது ரங்கசாமி விமர்சனம்

புதுச்சேரி: “கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி தருவதில்லை. அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்” என்று அரசு விழாவில் ஆளுநர் முன்னிலையில் புதுச்சேரி அரசு செயலர்கள் மீது அம்மாநில முதல்வர் ரங்கசாமி கடும் விமர்சனம் செய்தார்.

புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் அரசுக்கும், டெல்லி என்.எஸ்.கே.எப்.டி.சி நிறவனம் இடையே கழிவுநீர் பராமரிப்பு உபகரணம் கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி பேசியது: "நீண்ட வருடங்களாக பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் வாய்க்கால்களை சுத்தப்படுத்தவும், கழிவுகளை அகற்ற எந்திரம் வாங்க வேண்டும் என கூறி வருகிறேன். அது தற்போது நடந்துள்ளது. இதன்பிறகு இது செயல் வடிவம் பெறுவது உங்கள் கையில்தான் உள்ளது. அதை செய்ய இயலாது என செயலர் கூறுவதுபோல் இருக்கக் கூடாது. பிறர் மீது பழி போட்டு காலம் தள்ளக் கூடாது. அரசு செயலர்கள் கோப்புகளுக்கு உடனுக்குடன் அனுமதி தருவதில்லை. அதுபோல் செயல்படவில்லை.

குறிப்பாக, பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய முன்வருதில்லை. செயலர் மீது குற்றம்சாட்டுகின்றனர். எளிமையாக செய்ய வேண்டிய வேலையை கடுமையாக மாற்றி விடுகின்றனர். இதனால் ஒப்பந்ததாரர்கள் அச்சப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். புதுவை நகர பகுதியில் அதிகளவு உப்புத் தன்மை உள்ளதாக குடிநீர் உள்ளது. முதல் கட்டமாக ரூ.500 கோடியில் 50 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக மாற்ற திட்டமிட்டுள்ளோம். துறைமுக இடத்தில் காலியாக உள்ள இடத்தை பயன்படுத்த திட்டமிட்டோம்.

இத்திட்டத்தை பொதுப் பணித்துறை செயலர் கண்டு கொள்ளவில்லை. அது ஏன்? என எனக்கு புரியவில்லை. வேலை செய்தால்தான் புதுச்சேரி நன்றாக இருக்கும். அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். ஆனால், அதை முன்வந்து செய்வதில்லை. நன்றாக இல்லை. அரசு எந்த திட்டத்தையும் தீட்டத்தான் முடியும். அதற்கு செயல்வடிவம் கொடுப்பது அதிகாரிகள் கையில் தான் உள்ளது. இயந்திரங்கள் வாங்கி மட்டும் பிரயோஜனமில்லை. மற்றவர்கள் மீது பழிபோட்டே அதிகாரிகள் பழக்கப்பட்டு விட்டனர். வேலை செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்வேன். அதற்கு ஏற்றவாறு தலைமைச் செயலர், செயலர்கள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அதையடுத்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "முதல்வர் பேசும்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உச்ச நீதிமன்றம் ஆளுநர், முதல்வர் பிரச்சினைகளை அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என கூறியுள்ளது. நான் 2 மாதம் முன்பே இந்த கருத்தை தெரிவித்திருந்தேன். புதுவையில் அந்த நிலை இல்லை. புதுவை தலைமை செயலாளர் திட்ட காலதாமதத்துக்கான காரணம் குறித்து அமர்ந்து பேசவேண்டும். இதற்கான விளக்கத்தை பெற வேண்டும். துறைதோறும் அதிகாரிகள் பேசி காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். வரும் புத்தாண்டில் தாமதத்தை களைந்து திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.

இது தொடர்பாக ஏற்கனவே தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளேன். சில பேர் தெரிந்தும் செய்கின்றனர், சிலர் தெரியாமல் செய்கின்றனர், சிலர் திட்டத்தின் தீவிரம் அறியாமல் செய்கின்றனர். சுமுகமாக இதை தீர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். விழாவில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்எல்ஏ ஜான்குமார், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, பொதுப்பணித் துறை செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x