Published : 20 Dec 2023 12:19 PM
Last Updated : 20 Dec 2023 12:19 PM

தூத்துக்குடி வெள்ளம்: கயத்தாறு, விளாத்திகுளம் பகுதிகளில் கடும் பாதிப்பு

மேலக்கரந்தையில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையை மூழ்கடித்துச் செல்லும் காட்டாற்று வெள்ளம்.

கோவில்பட்டி: கயத்தாறில் இருந்து கழுகு மலை செல்லும் சாலையில் தெற்கு கோனார்கோட்டை புதூர் கிராமம் அருகே உள்ள ஓடை மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இங்குள்ள இளைஞர்கள் அவசர தேவைகளுக்கு செல்லும் மக்களை டிராக்டர் மூலம் ஓடையை கடந்து செல்ல உதவி வருகின்றனர். திருமங்கல குறிச்சி, செட்டிகுறிச்சி, வெள்ளாளங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி, பயிர்கள் சேதமடைந்துவிட்டன.

கோவில்பட்டியில் இருந்து செட்டி குறிச்சி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் வழியாக வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வைப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை ஊராட்சி கல்குமி கிராமத்தை சூழ்ந்து, அங்குள்ள விவசாய நிலங்களை மூழ்கடித்தது. சிங்கிலிபட்டி, கல்குமி - விளாத்திகுளம் நெடுஞ்சாலையை கடந்து வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் வெள்ளம் அதிகளவு சென்றதால் மேலக்கரந்தை - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இடையே போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மாசார்பட்டி அயன்ராசாபட்டி ,நென்மேனி, இருக்கன்குடி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முடங்கினர்.

கயத்தாறு தெற்கு கோனார் கோட்டை அருகே உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

எட்டயபுரம் அருகே கருப்பூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் புகுந்ததால், அலுவலக அறையில் இருந்த மடிக் கணினி, புத்தகங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. எட்டயபுரம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்த குருசாமி என்பவர் பண்ணையில் வளர்த்து வந்த சுமார் 6 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தன.கோழிப் பண்ணையும் ‌முற்றிலுமாக சேதமடைந்து விட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x