Published : 20 Dec 2023 05:14 AM
Last Updated : 20 Dec 2023 05:14 AM

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு

பொன்முடி | கோப்புப்படம்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை நாளைஅறிவிக்கிறது.

தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டுஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம்மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டுமாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில்பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றுகூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில்கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.

அப்போது, பொன்முடி தரப்பில், ‘மனைவி விசாலாட்சிக்கு சொந்தமாக பல ஏக்கரில் விவசாய நிலமும், தனியாகவணிகமும் நடந்து வருவதால், அதில்கிடைத்த வருமானத்தையும், என் வருமானத்துடன் ஒன்றாக சேர்த்துள்ளனர். புலன்விசாரணை அதிகாரி இதைகவனத்தில் கொள்ளவில்லை. எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால்தான் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது’ என்று வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், ‘பொன்முடி, விசாலாட்சிக்கு எதிரான வருமானவரி கணக்குகள், சொத்து விவரங்கள்,வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன், மொத்தம் 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. எனவேஅந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது.

நிறைவாக, கடந்த நவம்பர் 27-ம் தேதிஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிஜெயச்சந்திரன், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார். இந்நிலையில், அவர் நேற்று பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்தவழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72கோடி அளவுக்கு, அதாவது 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்துகுவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரிவரநிரூபணமாகியுள்ளன.

ஆனால், அவர்களது வருமானத்தைதனித்தனியாக பிரித்துப் பார்த்து, வருமான வரி கணக்கு அடிப்படையில் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது அடிப்படையிலேயே தவறு. அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன்.

இருவரும் குற்றவாளிகள்: பொது ஊழியரான அமைச்சர் பொன்முடிக்கு, கணக்கில் காட்டப்படாத வகையில் வந்த வருமானம் மூலம் அவரது மனைவி விசாலாட்சி பல்வேறு சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். இந்த மூலதன வருமானத்தை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்பதால் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக பொன்முடியும், அவரது மனைவியும் டிசம்பர் 21-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, காணொலி வாயிலாகவே ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதிஇழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல,இந்த வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

தற்போது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தனதுஎம்எல்ஏ, அமைச்சர் பதவியை பொன்முடி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலுவையில் மற்றொரு வழக்கு: கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக பொன்முடி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, விசாலாட்சி உள்ளிட்டோருக்கு எதிராக 2002-ல் அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விதமாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x