Published : 20 Dec 2023 04:49 AM
Last Updated : 20 Dec 2023 04:49 AM
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடிக்கு முதல்வர் நாளை செல்கிறார்.
இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி கோவையில் இருந்து டெல்லி சென்றார். அங்கு அவரை திமுக எம்.பி.க்கள்டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர். பிறகு ஸ்டாலினை, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று காலை சந்தித்து, கூட்டணியில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெருமளவில் வெள்ள சேதம் தவிர்க்கப்பட்டதுடன், மக்களும் பேராபத்தில் இருந்து காக்கப்பட்டனர். மழை நின்றதும் நிவாரண பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டன. மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில், கடந்த 17, 18-ம் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. கடுமையான மழைப் பொழிவு ஏற்படும் என்பதை வானிலை ஆய்வு மையம் 17-ம் தேதி தெரிவித்தது. ஆனால், வரலாறு காணாத அளவுக்கு, ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாக கிடைத்தாலும், அதிக மழைப் பொழிவு ஏற்பட்டாலும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. மழைப் பொழிவு கடுமையானதுமே, மீட்பு, நிவாரண பணிக்காக 8 அமைச்சர்கள், 10 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வட மாவட்டங்கள் போல, தற்போது தென் மாவட்டங்களிலும் மக்களை காக்கும் பணியில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறோம். அரசு இயந்திரம் முழுமையாக அந்த மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி சென்று, வெள்ள சேதத்தை பார்வையிட உள்ளேன்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
முதல்வர் இன்று வெள்ள சேதங்களை பார்வையிடுவதாக இருந்தது. இந்நிலையில், மத்திய குழு இன்று பார்வையிடுவதால் முதல்வர் நாளை செல்கிறார்.
கூடுதல் ஹெலிகாப்டர் தேவை: இதனிடையே தூத்துக்குடி, திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தால் பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை விநியோகிக்க முடியவில்லை. ஆனால், அவற்றை ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே விநியோகிக்க இயலும்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற் படையின் 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோரக் காவல் படையின் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெருமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகிறது. எனவே, அதிகபட்ச அளவில் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT