Last Updated : 19 Dec, 2023 09:47 PM

 

Published : 19 Dec 2023 09:47 PM
Last Updated : 19 Dec 2023 09:47 PM

தூத்துக்குடியில் வடியாத வெள்ளத்தில் மக்கள் பரிதவிப்பு - மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடானது | படங்கள்: மு.லெட்சு அருண்

தூத்துக்குடி: வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி- திருநெல்வேலி, தூத்துக்குடி- திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குளங்களில் உடைப்பு: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. கடந்த சனிக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை மதியம் வரை இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் தூத்துக்குடி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.மேலும், தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட சில குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்தத் தண்ணீரும் தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது. இதனால் தூத்துக்குடி நகரமே வெள்ளக்காடாக மாறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து மழை பெய்யவில்லை. இருப்பினரும் தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வடியாமல் தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.

மின்சாரம் துண்டிப்பு: முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், கேடிசி நகர், அம்பேத்கர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர், ராஜீவ் நகர், கோக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மற்ற பகுதிகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் நிற்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களாக மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். தரைத்தளங்களில் வசித்த மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், பலர் மாடிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கும், வெளியூர்களுக்கும் மூட்டை முடிச்சுகளுடன் குடிபெயர்ந்துள்ளனர்.

போக்குவரத்து துண்டிப்பு: தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளத்தில் காலாங்கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் தூத்துக்குடி நகருக்குள் புகுந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடி தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகேயுள்ள பாலம் அடித்து செல்லப்பட்டது. இதேபோல் முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்று வெள்ளம் சாலையை கடந்து சென்றது. இதனால் தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பாத்து ஓடை அருகே சாலையை கடந்து தண்ணீர் சென்றதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. அதேபோல் வரண்டியவேல் பகுதியில் கடம்பா மறுகால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையை தாண்டி பல அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மீட்பு மற்றும் நிவாரணம்: தூத்துக்குடியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்னன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் ஆய்வு செய்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டனர். அமைச்சர் எ.வ.வேலு பொக்லைன் இயந்திரத்தில் பயணித்து முத்தம்மாள் காலனி பகுதி மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.

மேலும், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசு, சிறப்பு அதிகாரியான வணிகவரித்துறை செயலர் ஜோதி நிர்மலா, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டனர்.

ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்: தூத்துக்குடியில் 100-க்கும் மேற்பட்ட படகுகள், பரிசல் படகுகள் மூலம் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். மேலும், ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், ராட்சத மின் மோட்டார்கள், பொக்லைன் இயந்திரங்கள் போன்றையும் வரவழைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தூத்துக்குடியில் வெள்ளம் வடிய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ரயில் பயணிகள் மீட்பு: ஸ்ரீவைகுண்டம் - செய்துங்கநல்லூர் ரயில் பாதையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 17-ம் தேதி இரவு 8.25 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் 33 கிலோ மீட்டர் பயணத்துக்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரவு 9.19 மணிக்கு நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலையில் அரசு அதிகாரிகள் உதவியுடன் 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அழைத்துச் சென்று அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்த மீட்புக்கு பிறகு வழியில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாதநிலை ஏற்பட்டது.

சிறப்பு ரயில்: தேசிய பேரிடர் மீட்பு குழு ஹெலிகாப்டர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்ளிட்ட3 ஹெலிகாப்டர்கள் மூலம் ரயிலில் இருந்த பயணிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த உணவுப் பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளுக்கு விநியோகித்தனர். அதன் பிறகு மதியம் 1 மணி அளவில் ரயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு, வாஞ்சி மணியாச்சி சென்றடைந்த பிறகு அங்கிருந்து 18 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு தயார் நிலையில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக ரயிலில் தவித்த பயணிகள் நிம்மதியடைந்தனர்.

இபிஎஸ் பார்வையிட்டார்: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று நேரில் பார்வையிட்டார்.மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து 1000 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி பக்கிள் ஓடையில் வெள்ள நீர் செல்வதை அவர் பார்வையிட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை: - பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். பருவ கால மழையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம். ஆனால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.21 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தமிழக அரசுக்கு தகவல் கிடைத்தும், அதற்கு ஏற்றாற்போல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இன்று இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்காது. பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்திருக்கலாம். படகு வரவில்லை, சாப்பாடு கிடைக்கவில்லை என மக்கள் கூறுகிறார்கள். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட காட்டாற்று வெள்ளத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தின் 10 கிராமங்கள் சாலைகள் துண்டிக்கப்பட்டு, தீவாக மாறி அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதன் விவரம் > தூத்துக்குடி காட்டாற்று வெள்ளம்: ராமநாதபுரத்தில் சாலை துண்டிக்கப்பட்டு தீவு ஆன 10 கிராமங்கள்!

160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்க வைப்பு: தென்மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் பால் விநியோகம் ஓரிரு நாட்களில் சீராகும். தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சார விநியோகம் நூறு சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும்கூட 60 சதவீத பகுதிகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படாமல் உள்ளது. அங்கு தற்போதுகூட தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

— SAC_IAF (@IafSac) December 19, 2023

வெள்ள பாதிப்பு - தமிழக முதல்வர் விளக்கம்: டெல்லி பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அங்கு தமிழ்நாடு இல்லத்தில் காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “டிச.18, 19-ம் தேதிகளில் அதி கனமழை இருக்கக்கூடும் என்பதை சென்னை வானிலை மையம் 17-ம் தேதி அளித்தது. வானிலை மையம் குறிப்பிட்ட மழை அளவை விட பல மடங்கு அதிகமான மழைப்பொழிவு இம்மாவட்டங்களில் பொழிந்தது. இதனால் அப்பகுதிகளே வெள்ளக்காடானது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒருநாளில் கொட்டித் தீர்த்தது. வானிலை மையத்தின் எச்சரிக்கை சற்றே தாமதமாக கிடைத்தாலும், அளித்த தகவலை விட அதிகமான மழைப்பொழிவு இருந்தாலும் தமிழக அரசு முன்கூட்டியே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது” என்று கூறினார்.

இதனிடையே, கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மீட்பு பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே, தூத்துக்குடியின் கடலோரப் பகுதிகளில் நிலைமையைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன் கூடிய இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆளுநர் ஆலோசனை: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்திய ராணுவம், விமானப் படை, கப்பல்படை, தேசிய பேரிடர் மீடப்புப் படை, இந்திய வானிலை மையம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x