Published : 19 Dec 2023 09:14 PM
Last Updated : 19 Dec 2023 09:14 PM
திருப்பூர்: "ஆளுநரின் ஆய்வுக் கூட்டம் தொடர்பாக விமர்சிக்க விரும்பவில்லை" என்று திருப்பூரில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா புகைப்பட கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள கே.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா புகைப்பட கண்காட்சியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.வு.மான க.செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். கண்காட்சியில் திராவிட இயக்க வரலாறு புகைப்படங்கள், தந்தை பெரியார், அண்ணா திருப்பூரில் சந்தித்த திராவிட இயக்க வரலாற்றின் முக்கிய நிகழ்வு தொடங்கி கருணாநிதி ஆட்சியின் போது திருப்பூருக்கு கிடைத்த மாநகராட்சி அந்தஸ்து, தனி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை விளக்கும் வகையில் கண்காட்சியில் அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதனை பார்வையிட்ட பின்னர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியது: "மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை திருப்பூரில் திறந்து வைப்பது பெருமைக்குரியது. பேராசிரியர் அன்பழகன் மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு செய்த சாதனைகளை திமுகவினர் மட்டுமல்லாது, தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட ஓமந்தூரார் சட்டப்பேரவை அலுவலகம் அதிமுகவின் குறுகிய மனப்பான்மையினாலும், பொறாமை எண்ணத்தாலும் மருத்துவமனையாக மாற்றப்பட்டதை மக்கள் உணர்வார்கள்.மு
தல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் பேரிடர் குறித்த முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பார். அவர்களும் நல்ல எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன். பேரிடர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வுக் கூட்டம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. பேரிடர் காலம் என்பதால், நல்லதை யார் செய்தாலும் அதனை திமுக வரவேற்கும்” என்று அவர் தெரிவித்தார்.
இக்கண்காட்சி ஜன.14-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள், கட்சியினர் மற்றும் இளைய தலைமுறையினர் பார்க்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT