Published : 19 Dec 2023 09:19 PM
Last Updated : 19 Dec 2023 09:19 PM
ராமநாதபுரம்: தூத்துக்குடி மாவட்ட காட்டாற்று வெள்ளத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தின் 10 கிராமங்கள் சாலைகள் துண்டிக்கப்பட்டு, தீவாக மாறி அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இத்தொகுதியின் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென்மேற்கு வங்கக் கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதியான தூத்துக்குடி மாவட்டம் லட்சுமிபுரம், மாவிலோடை பகுதிகளிலிருந்து நீர்வழித் தடங்களில் தண்ணீர் நிரம்பி, வெளியேறி காட்டாறு வெள்ளமாக கஞ்சம்பட்டி ஓடையில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியிலிருந்து செவல்பட்டி செல்லும் சாலை மற்றும் கொண்டுநல்லான்பட்டி வழியாக உச்சிநத்தம் செல்லும் சாலை ஆகிய இரண்டு பிரதான சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் எஸ்.தரைக்குடி, உச்சிநத்தம், வாலம்பட்டி, செவல்பட்டி, கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லாண்பட்டி, முத்துராமலிங்கபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்தின்றி முடங்கியுள்ளன.
மேலும், இக்கிராமங்களின் அருகிலுள்ள வி.சேதுராஜபுரத்திலிருந்து உச்சிநத்தம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததால் சாலை இரு துண்டாகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு, அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு மீட்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
கமுதி அருகே திம்மநாதபுரம், கடலாடி ஒன்றியம் செஞ்சடையநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தன. நரிப்பையூர், மாணிக்கநகர் கிராமங்கள் காட்டாற்று வெள்ளத்தால் சூழப்பட்டு முடங்கிக் கிடக்கின்றன. நரிப்பையூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செம்மறி ஆடுகளை தீயணைப்பு மீட்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள் உயிருடன் மீட்டு கொண்டு வந்தனர்.
கண்டுகொள்ளாத அமைச்சர் மற்றும் அதிகாரிகள்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாலம்பட்டியைச் சேர்ந்த உபேந்திரன் கூறியது: “கடலாடி தாலுகாவில் எஸ்.தரைக்குடி வருவாய் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டு எந்த போக்குவரத்தும் இன்றி, மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட முடியாமல் முடங்கியுள்ளனர். இப்பகுதி அமைச்சர் ராஜகண்ணப்பனின் சொந்த தொகுதியாகும். மேலும், திமுக மாவட்டச் செயலாளரும், ராமநாதபுரம் எம்எல்ஏவுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் இத்தொகுதியைச் சேர்ந்தவர். ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி பாதிக்கப்பட்ட கிராமங்களின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி ஆர்.தர்மர் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்தவர்.
இத்தொகுதியைச் சேர்ந்த இத்தனை பேர் முக்கிய பதவிகளில் இருந்தும் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட 10 கிராம பகுதிகளுக்கு வரவில்லை. மக்களுக்கு எந்த நிவாரண உதவியும் செய்யவில்லை. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வந்து முக்கிய சாலையில் இருந்து பார்த்துவிட்டு, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குள் வராமல் திரும்பிச் சென்றுவிடுகின்றனர். இதனால் இக்கிராம மக்கள் தவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீர் செய்யவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT