Published : 19 Dec 2023 05:59 PM
Last Updated : 19 Dec 2023 05:59 PM

தூத்துக்குடி வெள்ள மீட்புப் பணியில் ஹெலிகாப்டருடன் கூடிய ரோந்துக் கப்பல் நிறுத்தம்: மத்திய அரசு

சென்னை: தூத்துக்குடியின் கடலோரப் பகுதிகளில் நிலைமையைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன் கூடிய இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கும், உள்ளூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும் மாநில அரசு உதவி கோரியது. இதைத்தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படை ஆறு பேரிடர் நிவாரணக் குழுக்களை மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது. தூத்துக்குடியின் கடலோரப் பகுதிகளில் நிலைமையைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன் கூடிய இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களையொட்டி தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17,18 தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்ததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தற்போது தூத்துக்குடியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்திய கடலோரக் காவல்படையின் மாவட்ட தலைமையகம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

— SAC_IAF (@IafSac) December 19, 2023

தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்ட பின்னர், சென்னையில் இருந்து முக்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அழைத்து வருவது உட்பட வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மதுரையில் ஒரு நிலையான டோர்னியர் விமானம் மற்றும் ஏஎல்எச் ஹெலிகாப்டரை இந்திய கடலோரக் காவல்படை நிறுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே மீட்புப் பணிகளில் உதவுவதற்காக துடுப்புப் படகுகள், கயாக் வகை படகுகளுடன் மீட்புக் குழுவும், மண்டபம் கடலோரக் காவல்படை நிலையத்தில் இருந்து ஒரு பேரிடர் மீட்புக் குழுவும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முழுமையாக வாசிக்க > நெல்லை, தூத்துக்குடி வெள்ள மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

இதனிடையே, தென்மாவட்ட கனமழை பாதிப்பு மற்றும் அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறையின் உயர் அதிகாரிகள் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x