Published : 19 Dec 2023 02:50 PM
Last Updated : 19 Dec 2023 02:50 PM

நெல்லை, தூத்துக்குடி வெள்ள மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) எழுதியுள்ள அக்கடிதத்தில், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்துவருகிறது. ஒருசில இடங்களில் 1871-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பெய்துள்ளது. அதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அலுவலர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அங்கு அணி திரட்டியுள்ளோம். பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட நிவராணப் பொருட்கள் இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தால் மக்களுக்கு விநியோகிக்க முடியவில்லை. எனவே, அவற்றை ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே விநியோகிக்க இயலும்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மற்றம் கடலோரக் காவல் படையின் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெருமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் ஹெகாப்டர்கள் தேவைப்படுவதால், அதிகபட்ச அளவில் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று என்று முதல்வர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

களத்தில் ககன்தீப் சிங் பேடி... - கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை முதல் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

சாத்தான்குளம் – காயல்பட்டினம் பகுதிகளுக்கு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி மற்றும் பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் கூடுதலாக சிறப்பு முயற்சிகள் செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர் தாரேஷ் அகமது, மற்றும் சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. செந்தில்ராஜ், ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருடன் இணைந்து மீட்பு, நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைத்து மேற்கொள்வார்கள்.

மேலும், ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்குதல், வெள்ளத்தால் சூழ்ந்துள்ளோரை மீட்கும் பணியினை ஒருங்கிணைக்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், மதுரையிலிருந்து பணியாற்றவும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, அம்மாவட்டங்களுக்கு சென்று பணியாற்றுவார்கள்.

அத்துடன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் - சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கண்காணிப்பு அலுவலர் திருமதி. ஜோதி நிர்மலா, ஆகியோர் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x