Published : 19 Dec 2023 04:28 AM
Last Updated : 19 Dec 2023 04:28 AM

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டியது: மீட்பு பணியில் பேரிடர் மீட்பு படை, ராணுவம்

தொடர் கனமழை காரணமாக வெள்ள நீரில் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்ட மக்கள்

திருநெல்வேலி/ நாகர்கோவில்/ தென்காசி/ தூத்துக்குடி/ சென்னை: விடிய விடிய கொட்டித் தீர்த்த அதிகனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய இந்த கனமழை தொடர்ந்தது. நேற்று காலை 10 மணி வரை கனமழை பெய்து கொண்டே இருந்தது.

தாமிரபரணியில் 1 லட்சம் கனஅடி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதை அடுத்து அணைகளுக்கு வரும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் காட்டாற்று வெள்ளமாக வந்து சேரும் தண்ணீர் என்று தாமிரபரணியில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையைத் தாண்டி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தாமிரபரணி உற்பத்தியாகும் பாபநாசம் தொடங்கி, கடலில் சேரும் திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் வரையிலும் ஆற்றின் இருபுறமும் உள்ள நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

சீவலப்பேரி அருகே உள்ள குப்பக்குறிச்சி, வெள்ளக்கோவில், ராஜாக்குடி ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதிகளில் இருந்து பலர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாநகரில் தாமிரபரணி வெள்ளம் புகுந்ததால் திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம், சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், பாலபாக்யா நகர், உடையார்பட்டி, மணிமூர்த்தீஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அறிவியல் மையம் வெள்ளத்தால் சூழப்பட்டன. திருநெல்வேலி - மதுரை நெடுஞ்சாலையில் வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் தாமிரபரணி பாலத்துக்கு மேல் தண்ணீர் சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தூத்துக்குடி நகருக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் மாநகரப் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் கழுத்தளவுக்கு மழைநீர் தேங்கியது. காயல்பட்டினம், திருச்செந்தூர், வைகுண்டம், சாத்தான்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ. மழை பதிவானது.

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் கழுத்தளவு வெள்ளத்தில் தத்தளித்த மக்கள்படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான அம்மா உணவகங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைக்க முடியாத நிலைஏற்பட்டது. உணவகம் உள்ளிட்ட எந்தகடையும் நேற்று திறக்கப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து அவசரமாக தூத்துக்குடி திரும்பிய கனிமொழி எம்.பி.மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.

தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணை தவிர மற்ற 4 அணைகளும் நிரம்பிவிட்டதால் அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. தென்காசி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவிகள் மற்றும் சிற்றாறு கரைக்கு யாரும் செல்ல முடியாமல் தடுப்புகளை போலீஸார் வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழையால் ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்புஅருவியில் கடும் வெள்ளம் கொட்டுவதால், வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்தனர்.

நாகர்கோவில், புத்தேரி அருகே சக்திகார்டன், மீனாட்சி கார்டன், சுசீந்திரம், திருப்பதிசாரம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை தீயணைப்புத் துறையினர், கமாண்டோ வீரர்கள் ரப்பர் படகில் மீட்டு கரைசேர்த்தனர். ராணுவத் தினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

மீட்பு, நிவாரண பணி தொடர்பாகஉதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசுஉள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால்,4 மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் டெல்லியில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் காணொலியில் பேசி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். ராணுவம்,கடலோரக் காவல் படை, அஞ்சல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x