Published : 21 Jul 2014 10:00 AM
Last Updated : 21 Jul 2014 10:00 AM
வல்லநாடு சரணாலயத்தில், வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் வெளிமான்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட சரணாலயம்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில், திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வல்லநாடு வெளிமான் சரணாலயம். 1641.21 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், கடந்த 1987-ம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் தென்கோடியில், வெளிமான்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சரணாலயம் இது. மேலும் இது, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
விலங்கு-பறவைகள்
இங்கு, வெளிமான்களை தவிர புள்ளி மான்கள், மிளா, குள்ளநரி, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, முயல்கள், கீரி, பாம்பினங்கள், தேள் வகைகள் காணப்படுகின்றன. மேலும், மயில், குயில், கழுகு, பருந்து, மரகத புறா, நாரை, மரங்கொத்தி போன்ற பல பறவையினங்களும் வாழ்ந்து வருகின்றன. 19-ம் நூற்றாண்டு வரை வெளிமான்கள் இந்தியாவில் அதிகளவில் இருந்தன.
ஆனால், தற்போது அவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் கோடியக்கரை, சத்தியமங்கலம், நாகப்பட்டினம் மற்றும் வல்லநாடு ஆகிய 4 இடங்களில் மட்டுமே வெளிமான்கள் உள்ளன.
எண்ணிக்கை அதிகரிப்பு
அழிந்து வரும் இனமாக இருப்பதால் வெளிமான்கள், தமிழ்நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ், பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பின், அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் (சிவப்பு புத்தகம்) இடம் பெற்றுள்ளது.
இதனால், வெளிமான்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவின் பல இடங்களில் வெளிமான்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில், வல்லநாடு சரணாலயத்தில் இவற்றின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து கொண்டே வருகிறது.
வனத்துறை நம்பிக்கை
கடந்த 2010 தொடக்கத்தில் வெறும் 26 வெளிமான்களே இங்கு இருந்தன. அதே ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது. 2013-ம் ஆண்டு தொடக்கத்தில் எடுத்த கணக்கெடுப்பில் 79 வெளிமான்கள் இருப்பதாக கண்டறியப்பட்டன. அதாவது, ஆண் மான்கள் 27, பெண் மான்கள் 43, குட்டிகள் 9 இருந்தன.
ஆனால், இந்த எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதம் எடுத்த கண்கெடுப்பில் 120-ஐ தாண்டிவிட்டது. டிசம்பர் மாதத்துக்கு பிறகு, கடந்த 6 மாதத்தில் இந்த எண்ணிக்கை 200-ஐ தொட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கூட்டம் கூட்டமாக
வல்லநாடு சரணாலய பகுதியில், ஒரு காலத்தில் மான்களை பார்ப்பதே அரிது என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது காலை, மாலை வேளைகளில் ஆண், பெண், குட்டிகள் என கூட்டம் கூட்டமாக அருகில் உள்ள சமவெளி பகுதிகளில் மேய்வதை கண்கூடாக பார்க்கலாம். இதுவே மான்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்கு சான்று.
3 ஆண்டுகளில் மூன்று மடங்காக வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வனத்துறையினரை மட்டுமல்லாது, இயற்கை ஆர்வலர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தீவிர கண்காணிப்பு
வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையே காரணம் என்கிறார், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் சி. செண்பகமூர்த்தி.
‘தி இந்து’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:
வல்லநாடு வெளிமான் சரணாலய பகுதியில் வேட்டையாடுதல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நியர்கள் வனப்பகுதிக்குள் நுழைவதும் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகள் வனப்பகுதிகளுக்குள் மேய்வதை தடுத்துள்ளோம்.
வனக்காவலர்கள் இரவு, பகல் பாராது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரவு நேரத்தில் அங்கேயே தங்கியிருக்கின்றனர். வனத்துறையினரின் முயற்சியால் வரும் நாள்களில் வெளிமான்களின் எண்ணிக்கை மேலும் உயரும், என்றார் அவர்.
புல்வெளி உருவாக்குதல்
திருவைகுண்டம் வனச்சரகர் சி. நெல்லை நாயகம் கூறும்போது, ‘வெளிமான்களின் முக்கிய இரை புல் தான். எனவே, மலை பகுதியில் புல்வெளிகளை உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
சோதனை அடிப்படையில் 2 ஹெக்டேரில் புல் விதைகளை விதைத்தோம். புல் முளைத்ததும் அந்த பகுதியில் வெளிமான்கள் அதிகம் தங்கியதை அறிந்தோம். இதையடுத்து 5 ஹெக்டேரில் புல் விதைகளை விதைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும், மான்களுக்கு தேவையான குடிநீர் வசதிக்கு 4 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்துள்ளோம். ஆழ்துளை கிணறு அமைத்து ஆயில் என்ஜின் உதவியுடன் தொட்டிகளில் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறோம். சரணாலயம் முழுவதையும் கண்காணிக்க 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, வனக்காவலர்கள் 24 மணி நேரமும் ஷிப்ட் அடிப்படையில் பணியில் உள்ளனர். சரணாலயத்தில் 2 இடங்களில் கேமரா பொறுத்தப்பட்டு மான்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது’, என்றார் அவர்.
பேட்மா நகரம் வரை ‘வாக்கிங்’!
சரணாலயத்துக்கு அருகேயுள்ள சமவெளி பகுதிகளுக்கு, வெளிமான்கள் சுதந்திரமாக சென்று மேய்ந்துவிட்டு திரும்புகின்றன. 13 கி.மீ. தொலைவுள்ள பேட்மா நகரம் வரை செல்கின்றன. சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மான்களை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
வல்லநாடு வெளிமான் சரணாலயத்தை மாணவர்கள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு செல்கின்றனர். மலையேறும் பயிற்சிக்காக 6 கி.மீ. தொலைவுக்கு டிராக் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு வந்து மலையேறும் பயிற்சி மேற்கொள்கின்றனர். சரணாலயத்துக்குள் மாணவர்கள், பொதுமக்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதித்து மான்களை பார்வையிட வசதி செய்யும் வகையில், சூழல் சுற்றுலா மையமாக மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
வெளிமான்கள் மிகவும் சென்சிட்டிவ் ஆன விலங்கு. சிறு அசைவு கூட அதனை தொந்தரவு செய்யும். எனவே, அவைகளை தொந்தரவு செய்யாமல் சுதந்திரமாக நடமாட விட்டாலே போதும், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மான்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார் வனச்சரகர் சி. நெல்லை நாயகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT