Published : 19 Dec 2023 06:10 AM
Last Updated : 19 Dec 2023 06:10 AM

எண்ணூர் கடல் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு ஓரிரு நாளில் அகற்றப்படும்: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் தகவல்

சென்னை: எண்ணூர் கடல் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு படலம்ஓரிரு தினங்களுக்குள் அகற்றப்படும் என சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘மிக்ஜாம்’ புயல், அதிகன மழைகாரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், எண்ணூர் கடல் முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் படர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் சிபிசிஎல் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எண்ணூர் கடல் முகத்துவாரத்தில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்ற 20 ஆயிரம் எண்ணெய் உறிஞ்சும் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னை, மும்பை, பாரதீப் ஆகியஇடங்களில் இருந்து 4 ஏஜென்சிகள் எண்ணெய் கசிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. இவை தவிர, 110 படகுகளில் 440 பணியாளர்கள் எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை கண்காணிக்க சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழக அரசு முகமைகளுடன் இணைந்து எண்ணெய் கசிவு அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதால், இன்னும் 2 அல்லது 3தினங்களில் இப்பணி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் ஆய்வு: சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அதேபோல திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் எண்ணெய் படலம் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 நிலையான மருத்துவ முகாம்கள் மற்றும் 17 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 20 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்றது. இதில்கத்திவாக்கம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதாரம் நிலையத்தில் மழைக்கால சிறப்பு முகாமைஆணையர் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``எண்ணூர் முகத்துவாரப் பகுதியில்மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி மூலம் இதுவரை 12 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் கடந்த டிச.6 முதல் டிச.17-ம் தேதி வரை மொத்தம்ஒரு லட்சத்து 2,709 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது'' என்றார். இந்நிகழ்வில் கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், மாமன்றஉறுப்பினர் ச.கோமதி சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x