Published : 19 Dec 2023 06:06 AM
Last Updated : 19 Dec 2023 06:06 AM
சென்னை: கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல், ஊதிய உயர்வு, தணிக்கைதடைகளுக்குத் தீர்வு, பணியிடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பு கோயில் செயல் அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநில தலைவர்பெ.சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கோ.ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன்னிலை வகித்தார். அறநிலையத் துறை ஊழியர்கள் சங்கத் தலைவர் வாசுகி,தமிழ்நாடு கோயில் தொழிலாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் தனசேகர், மாநிலச் செயலாளர் ரமேஷ் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் மாநிலதலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், ``இந்து சமய அறநிலையத் துறை மூலம் பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. ஆனால், கோயில் அளவில் அத்தகைய பணிகளைச் செய்வதற்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஆனால், சொற்ப அளவில்தான் செயல் அலுவலர்கள் உள்ளனர். 600 செயல் அலுவலர்களில், தற்போது 450 பேர்தான் பணியில் உள்ளனர். 150 பணியிடங்கள் காலியாக உள்ளன. செயல் அலுவலர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதேசமயம் பணியிடங்களை உயர்த்த வேண்டும். மேலும், ஊழியர்கள் மீது விதிகளுக்கு மாறாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. செயல் அலுவலர்களுக்குப் பதவிஉயர்வு கிடைத்தாலும், ஊதியம் உயர்வு இருப்பதில்லை. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT