Published : 19 Dec 2023 06:00 AM
Last Updated : 19 Dec 2023 06:00 AM

எண்ணூர் எண்ணெய் கசிவால் உயிரினங்கள் பாதிப்பு குறித்து அறிக்கை தரவேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவால் மீன், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக மீன்வளத் துறை, வனத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய், பக்கிங்ஹாம் கால்வாயில் கலந்து, கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் பரவியது. வெள்ளம் பாய்ந்த மீனவ குப்பங்களிலும் எண்ணெய் கழிவுகள் படிந்தன. மீன்பிடி படகுகள், வலைகளும் பாழாயின. இதனால் பொதுமக்களும், மீனவர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் உயர்மட்ட குழுவும் அமைத்துள்ளது. இந்த விசாரணையில் சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய்யைவெளியேற்றியதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குஅமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஎல் நிறுவனம் சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் அப்துல் சலீம் கூறியதாவது: எண்ணெய் கழிவு பரவலை தடுக்க 1,430 மீட்டர் நீளத்துக்கு பூம் மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஸ்கிம்மர் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முகத்துவாரப் பகுதியில் பெரிய அளவில் படர்ந்திருந்த எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன. எஞ்சிய எண்ணெய் படலம் 3 நாட்களுக்குள் அகற்றப்படும். இவற்றை அகற்றும் பணியில் பிரத்யேக 4 அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் 110 படகுகளும், 440 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரையோரம் மண், குப்பையில் படிந்திருந்த எண்ணெய் படலங்கள் 90 டன் அளவில் அகற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் மருத்துவ முகாம்நடத்தப்பட்டு 2 ஆயிரத்து 115 பேர் பயனடைந்துள்ளனர். அரிசிஅடங்கிய 11 ஆயிரம் பைகள், மளிகை பொருட்கள் அடங்கிய 6 ஆயிரம் பைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 112 பேர் வீடுகளில் படிந்துள்ள கழிவுகளை அகற்றி வருகின்றனர். 230 வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மீனவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, பழவேற்காடு பகுதியிலும் எண்ணெய் கழிவுகள் படிந்திருப்பதாக குற்றம்சாட்டினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்சத்யஜித் கூறும்போது, ``தற்போது கடல் பரப்பில் எண்ணெய் பரவல் இல்லை என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. எவ்வளவு எண்ணெய் கழிவு வெளியேறியுள்ளது, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது குறித்து ஐஐடி சென்னை பேராசிரியர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர். முகத்துவாரப் பகுதியில் உள்ளஅலையாத்தி காடுகளை சீரமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மீன்கள் இறப்பு தொடர்பாக மீன்வளத் துறையும், பறவைகள், கடல் ஆமை, தாவரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக வனத் துறையும் மதிப்பீடு செய்து வருகின்றன'' என்றார். இந்நிலையில், இது தொடர்பாக மீன்வளம் மற்றும் வனத் துறை இதுவரை ஏன் அறிக்கை தாக்கல்செய்யவில்லை? என அதிருப்தி தெரிவித்த அமர்வின் உறுப்பினர்கள், ‘‘இரு துறைகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பழவேற்காடு பகுதியில் எண்ணெய் கழிவு படிந்திருப்பது தொடர்பாகவும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x