Published : 19 Dec 2023 04:06 AM
Last Updated : 19 Dec 2023 04:06 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் / சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழைக்குளம், வேப்பங்குளம், பெரியகுளம் கணமாய் மடைகள் திறக்கப்பட்ட தால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் பொதுமக்கள் சிரமத்துக் குள்ளாகினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மம்சாபுரம் வாழைக் குளம் கண்மாய், வேப்பங்குளம் கண்மாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதையடுத்து, வாழைக்குளம், வேப்பங்குளம் கண்மாய்களின் மடை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்தது.
இத்துடன் கனமழையும் பெய்ததை அடுத்து, பெரியகுளம் கண்மாய் மடை நேற்று அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டது. இதனால் அதிகமான நீர் வெளியேறி சந்தைய கிணற்று தெரு, முதலியார்பட்டி தெரு, செட்டியகுடி தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகுலராமபேரி கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு, வட்டாட்சியர் அலுவலக வளாகம், கிருஷ்ணன் கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. அச்சம் தவிர்த்தான் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அத்திகுளம், அச்சம் தவிர்த்தான், அனணத் தலைபட்டி, நாச்சியார்பட்டி, ரெட்டியபட்டி, விளாம்பட்டி கிராமங்களுக்கு வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை 183 மி.மீ. மழையளவு பதிவானது. அச்சம் தவிர்த்தான் அருகே உள்ள அணைத் தலைப்பட்டி பெரிய கண்மாய் நிரம்பிய நிலையில், நீர்வரத்து அதிகரித்ததால் கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது.
இதையடுத்து வீடுகளில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அணைத்தலைப் பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (62), சுப்புலட்சுமி (58) தம்பதியின் வீட்டைச் சுற்றிலும் வெள்ளநீர் தேங்கியதால், அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இது குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர், கயிறு மூலம் பழனிச்சாமி, சுப்புலட்சுமி ஆகியோரை பாதுகாப்பாக மீட்டனர். இருவரும் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
சிவகாசியில் 35 வீடுகள் சேதம்: சிவகாசியில் நேற்று முன்தினம் 52 மி.மீ, நேற்று 171 மி.மீ. மழை பதிவானது. சிவகாசி அருகே மேலமாத்தூர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால், 88 பேர் மீட்கப்பட்டு சேர்வைக் காரன்பட்டி நடுநிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழை காரணமாக சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆனையூர், திருத்தங்கல், காளையார்குறிச்சி, நமஸ்கரித்தான்பட்டி, விஸ்வநத்தம், உள்ளிட்ட பகுதிகளில் 31 ஓட்டு வீடுகள், 4 ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகள் சேதமடைந்தன. வருவாய்த் துறை யினர் மழை சேத பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT