Published : 16 Jan 2018 10:20 PM
Last Updated : 16 Jan 2018 10:20 PM
கடந்த ஆண்டு மத்திய அரசிடம் போராடி அனுமதி பெற்றுக்கொடுத்து முதல்வராக வந்தபோது ஓ.பன்னீர்செல்வத்தை அலங்காநல்லூர் மக்கள் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க ஊருக்குள் நுழையவிடாமல் புறக்கணித்தனர். ஆனால், அதே மக்கள் இன்று அவரை துணை முதல்வராக ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வந்தபோது அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
உச்ச நீதிமன்ற தடையை மீறி கடந்த ஆண்டு இதே நேரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காநல்லூர் மக்கள் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் தமிழகம் முழுவதும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் பேசி, சட்டசபையில் சிறப்பு சட்டம் இயற்றி உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிகட்டுக்கு இருந்த தடையை நீக்க பெரும் முயற்சி செய்தார். ஆனால், மாநில அரசு தற்காலிகமாகவே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் நிறைவேற்றியதாகக் கூறி கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை அலங்காநல்லூரில் தொடங்கி வைக்க வந்த அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வதை பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அலங்காநல்லூர் ஊருக்குள் நுழையவிடவில்லை. அலங்காநல்லூர் ஊரைச் சுற்றிலும் சாலைகளை மரங்களை வெட்டிப்போட்டு, கற்களை வரிசையாக அடுக்கினர். அதனால், மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பி சென்றார்.
அதிமுகவுக்கும், அதன் அரசுக்கு எதிராக ஜல்லிக்கட்டு போராட்டம் திசை திரும்பியதால் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் விலகினர். அதன்பிறகு போலீஸார் தடியடி, கைது நடவடிக்கையில் இறங்கியதால் போராட்டம் ஒய்ந்தது. ஜல்லிக்கட்டுக்கும் நிரந்தர தடை நீங்கி பொங்கல் பண்டிகை முடிந்தபிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் வழக்கம்போல் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கிவைக்க வந்தனர். அவர்களுக்கு அலங்காநல்லூர் ஊர் கமிட்டியினர், பொதுமக்கள், வாடிவாசலில் இருந்து விழா மேடை வரை சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
கடந்த முறை ஊருக்குள் வரமுடியாமல் எதிர்ப்பு, இந்த முறை சிவப்புக் கம்பள வரவேற்பால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது.
இன்று கூட செய்தியாளர்கள் அவரிடம், இப்போது வந்ததையும், கடந்த முறை வந்ததையும் எப்படி உணர்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். சிரித்துக் கொண்டே, ''அதை ஏன் கேட்கிறீர்கள், வம்புக்குள் இழுத்துவிட வேண்டாம்'' எனக் கூறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT