Last Updated : 18 Dec, 2023 04:31 PM

 

Published : 18 Dec 2023 04:31 PM
Last Updated : 18 Dec 2023 04:31 PM

தொடர் கனமழை: தேனி மாவட்டத்தில் நிரம்பிய 70% கண்மாய்கள்!

தேனி அருகே ராஜ பூபால சமுத்திரம் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்கிறது. | படம்: என்.கணேஷ் ராஜ்.

தேனி: தொடர் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள 70 சதவீத கண்மாய்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துளளனர்.

தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே மரக்காமலை உள்ளது. இப்பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழை சிற்றாறுகளாக பெருக்கெடுத்து வாழையாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் இருந்து ராஜ பூபால சமுத்திரம் கண்மாய்க்கு நீர் செல்கிறது. 121 ஏக்கர் பரப்பளவு உள்ள இக்கண்மய் மூலம் ஆதிபட்டி, பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. இங்கிருந்து வெளியேறும் நீர் கெட்டக்குடி ஆற்றில் கலக்கிறது. குறைவாக பெய்யும் மழை, நீர்வரத்து பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் போன்ற காரணத்தினால் ராஜ பூபால சமுத்திரம் கண்மாய் நிரம்பாத நிலையே இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு இக்கண்மாயில் நீர் மறுகால் பாய்ந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தேனி மாவட்டத்தின் 5 வட்டங்களில் உள்ள மீறு சமுத்திரம், சங்கரப்ப நாயக்கன் குளம், பங்காருசாமி நாயக்கர் குளம், அம்மா குளம், புதுக் குளம், கருவன் குளம் மந்தையம்மன் உள்ளிட்ட பல கண்மாய்களிலும் நீர் நிரம்பி உள்ளன.

நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மஞ்சளாறு வடிநில கோட்டத்தில் 91 கண்மாய்களும், பெரியாறு வைகை வடி நில கோட்டம் மற்றும் வருவாய்த் துறை, ஊராட்சி கண்மாய்கள் என மாவட்ட அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. கடந்த 2 மாதங்களாக அடுத்தடுத்து தொடர் மழை பெய்தததால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், 2 நாட்களாக பெய்து வரும் மழையினால் 70 சதவீத கண்மாய்கள் நிரம்பி விட்டன என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x