Published : 18 Dec 2023 02:51 PM
Last Updated : 18 Dec 2023 02:51 PM
சென்னை: தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழகஅரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “ட்விட்டர்”- மூலம் தெரிவிக்கலாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, எஸ். ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரைவுப்படுத்த கூடுதலாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகிய அமைச்சர்களை முதல்வர் நியமித்துள்ளார்.
மேலும், கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழக அரசின் 8148539914 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், http://twitter.com/tn_rescuerelief (Username - @tn_rescuerelief) ட்விட்டர் பக்கத்திலும் பதிவுகளை தெரிவிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment