Published : 18 Dec 2023 11:39 AM
Last Updated : 18 Dec 2023 11:39 AM
சென்னை: “காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென் மாவட்டங்களில் வரலாறு மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. காயல் பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது.
அதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவாக மாறியிருக்கின்றன. இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவுக்கு பிறகு தான் கடுமையான மழை பெய்தது என்பதாலும், இவ்வளவு அதிக மழை பெய்யும் என்பதை எவரும் எதிர்பார்க்காததாலும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்து கொண்டிருப்பார்களா? என்பது தெரியவில்லை. அவர்களுக்குத் தேவையான பால், ரொட்டி, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மழை வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகமே மழை - வெள்ளத்தால் சூழப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால், பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க அதிக எண்ணிக்கையில் நிவாரண முகாம்கள் தேவைப்படக் கூடும். அவற்றை உடனடியாக அமைத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வந்து அங்கு தங்க வைத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்.
காயல்பட்டினத்தில் பெய்துள்ள 95 செ.மீ மழை என்பது, வழக்கமான காலத்தில் அங்கு ஆண்டு முழுவதும் பெய்யும் மழையை விட அதிகம் ஆகும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இதுவும் ஒன்று என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் காலநிலை மாற்ற அவசர நிலையை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT