Last Updated : 02 Jan, 2018 10:27 AM

 

Published : 02 Jan 2018 10:27 AM
Last Updated : 02 Jan 2018 10:27 AM

பொங்கல் பண்டிகையையொட்டி அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்: கடந்த ஆண்டைவிட விலை அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, பாரம்பரிய முறையில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா தமிழர் வாழும் பகுதிகளில் எங்கும் வெகு சிறப்பாக தை முதல் நாளன்று கொண்டாடப்பட உள்ளது. விவசாயத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லைப் பயன்படுத்தி பச்சரிசி எடுத்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படைப்பது வழக்கம்.

தைப் பொங்கல் திருநாளில் தமிழர் இல்லந்தோறும் சர்க்கரை மற்றும் வெண் பொங்கலிட்டு, அதை வீட்டு வாசலில் படையலிட்டு வணங்குவார்கள். மேலும், விவசாயத்தோடு ஒன்றிணைந்துள்ள கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மறுநாள் பொங்கலிட்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள்.

சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு பொதுமக்கள் அச்சுவெல்லத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த அச்சுவெல்லம் தயாரிப்பதில் தஞ்சாவூர் மாவட்டம் முக்கிய இடத்தை வகிக்கிறது.

தொடக்க காலத்தில் கரும்பு ஆலைகள் இல்லாதபோது, விவசாயிகள் கரும்பைப் பயிரிட்டு அதை தங்களுடைய இல்லங்களிலேயே சாறாகப் பிழிந்து, பாகு காய்ச்சி சரியான பக்குவத்தில் அச்சில் ஊற்றி வெல்லமாகத் தயாரித்துப் பயன்படுத்தி வந்தனர்.

காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளின் வரவால், கரும்பு உற்பத்தி மற்றும் சர்க்கரை உற்பத்தி அதிகரித்தாலும், அச்சுவெல்லம் தயாரிப்பதும், அதை பொங்கலுக்கு பயன்படுத்துவதும் இன்னும் மாறவில்லை, மறையவில்லை.

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் இலுப்பகோரை, மாகாலிபுரம், உள்ளிக்கடை, புதுத்தெரு, கிருஷ்ணாபுரம், கணபதி அக்ரஹாரம், மணலூர், தேவன்குடி, வீரமாங்குடி, சோமேஸ்வரபுரம், செம்மங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிசைத் தொழிலாக அச்சுவெல்லம் தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் அச்சுவெல்லம் பெரும்பாலும் திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த நெய்க்காரப்பட்டி வெல்ல மண்டிக்கு கொண்டு செல்லப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டு முழுவதும் அச்சுவெல்லம் தயாரிப்பு பணி இருந்தாலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகமாக இருக்கும். இப்பகுதியில் தயாரிக்கப்படும் அச்சுவெல்லம் இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதுகுறித்து, அச்சுவெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உடுமலைப்பேட்டை பல்லாபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி கூறியதாவது: உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஏராளமானோர் இப்பகுதியில் 100 இடங்களில் வெல்லம் காய்ச்சி வருகிறோம். ஆண்டுதோறும் இப்பகுதிக்கு வந்து வெல்லம் தயாரிப்பில் குடும்பத்தோடு ஈடுபடுவது வழக்கம்.

ஆவணி மாதம் இங்கு வரும் நாங்கள், பங்குனி மாதம் வரை இந்த தொழிலில் ஈடுபடுவோம். வெல்லம் காய்ச்ச தேவையான கரும்பை இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து டன் ரூ.2,500 என விலை கொடுத்து வாங்குகிறோம்.

கரும்பை நாங்களே வெட்டி எடுத்து டிராக்டர் மூலம் கொண்டு வருகிறோம். பின்னர் காய்ச்சிய கரும்புச் சாறை பக்குவமாக அச்சில் ஊற்றி வெல்லம் தயாரித்து 30 கிலோ கொண்ட சிப்பமாகக் (சிறு மூட்டை) கட்டி நெய்க்காரப்பட்டி சந்தைக்குக் கொண்டு செல்வோம். இச்சந்தையில் வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் ஏலம் நடைபெறும்.

தற்போது, சிப்பம் ரூ.1,300 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு, இதே நேரத்தில் சிப்பம் ரூ.1,000-க்குதான் விற்றது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பாபநாசம் பகுதியில் கடந்த ஆண்டு அதிகளவில் கரும்பு பயிரிட்டிருந்தனர். இந்தாண்டு குறைவாகப் பயிரிட்டுள்ளதால், கரும்புக்கான விலை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x