Published : 18 Dec 2023 05:21 AM
Last Updated : 18 Dec 2023 05:21 AM

தென் மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவுதொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று இரவு வரை இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது.

வீடுகளுக்குள் மழைநீர்: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனி, டவுன் வ.உ.சி. தெரு,பாரதியார் தெருவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். திருநெல்வேலி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் முடங்கின. நாகர்கோவில் மீனாட்சி கார்டன், வடசேரி புளியடி, பாரைக்கால் மடம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மக்களை மீட்டனர். அஞ்சுகிராமம், செட்டிகுளம் பகுதிகளில் சாலைகள் ஆறுபோல காட்சியளித்தன. இதனால் அப்பகுதியிலும், திருவனந்தபுரம் சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. பழையாற்றில் கடும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தெருக்களில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் சென்றதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கினர். கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாத்தான்குளம் அண்ணா நகர்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரிலும் தெருக்கள், சாலைகள்வெள்ளக்காடாகின. வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு பகுதிகளில் பிசான சாகுபடிக்காக தயார் செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கின.

தூத்துக்குடி மாநகர பகுதியில் அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராஜீவ் நகர், கதிர்வேல் நகர், ராஜகோபால் நகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. பல இடங்களில் மின்சாரம் முழுமையாக தடைபட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

விமான சேவை பாதிப்பு: சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் விமான சேவை பெரிதும்பாதிக்கப்பட்டது. காலை 7.25 மணிக்கு வரும் விமானம் மட்டும் வழக்கம்போல வந்துவிட்டு, திரும்பிச் சென்றது. காலை 11.55 மணிக்கு வரவேண்டிய விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது. மாலை 4 மணிக்கு வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. 2.05 மணிக்கு வந்த பெங்களூரு விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கே திருப்பிவிடப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

இன்றும் கனமழை எச்சரிக்கை: இந்நிலையில், இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (18-ம் தேதி) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாக துணைவேந்தர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

4 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனாவும் ஆலோசனை நடத்திஉரிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x