Published : 18 Dec 2023 05:35 AM
Last Updated : 18 Dec 2023 05:35 AM
சென்னை: எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்ற தொழில்நுட்ப வல்லுநர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு கொசஸ்தலை ஆற்றில் கலந்து, கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி, மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளிலும் எண்ணெய் கழிவு புகுந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் படகில் சென்று அப்பகுதியை நேற்று பார்வையிட்டார். மேலும், அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் இங்கு பலமுறை வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வரும்போதும், இந்தப் பகுதி மேம்படும் என்ற நம்பிக்கையை அளித்தே செல்கிறேன். ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.
தண்ணீருக்கு மேல் பிளாஸ்டிக்கை விரித்ததுபோல எண்ணெய் கழிவு மிதக்கிறது. அதை அகற்றும் பணி இன்னும் முடிந்தபாடில்லை. எண்ணெய் கழிவை அகற்றுவதற்கான உரிய இயந்திரங்கள் இல்லாமல், வாளிகள் போன்றவற்றை மீனவர்களிடம் வழங்கி, தூய்மைபடுத்துமாறு கூறுவது மனிதாபிமானமற்ற செயல். சந்திரனுக்கு ஏவுகணை அனுப்ப முடிந்தவர்களால், நவீன கருவிகள் வழங்க முடியாதா. எனவே, தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும்.
எண்ணெய் கழிவை அகற்ற வேண்டியவர்கள் மீனவர்கள் அல்ல. சம்பந்தப்பட்ட நிறுவனம் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து, எண்ணெய் கழிவை அவர்களது செலவில் அகற்றித்தர வேண்டும். அதேநேரத்தில், இதற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனையை அரசு வழங்க வேண்டும். இல்வாவிட்டால், இதுபோலஆண்டுதோறும் நிகழும்.
மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க யாரும் முன்வருவதில்லை. அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான வாக்குறுதியை நாம் அனைவரும் வழங்க வேண்டும். தமிழக அரசு நிவாரணம் வழங்கும். அதற்கு முன், தவறு செய்தவர்கள் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா, மீனவரணி செயலாளர் ஆர்.பிரதீப்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT