Published : 18 Dec 2023 05:51 AM
Last Updated : 18 Dec 2023 05:51 AM

எண்ணூர் மீனவர்களுக்கு நிவாரணம்: பாஜக தலைவர்களிடம் பிரேமலதா கோரிக்கை

பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை:

மிக்ஜாம் புயலின்போது, சென்னை மணலி தொழிற்பேட்டையில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் கசிவால் எண்ணூர் முகத்துவாரம், எர்ணாவூர், நெடுங்குப்பம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மீனவ மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீட்டுப்பொருட்கள் மட்டுமின்றி மீனவர்களின் படகுகள், மோட்டார்கள், வலைகள் பாழானதால் 8 மீனவ குப்பங்களை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் அமைச்சர்கள் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயரளவில் மட்டுமே ஆய்வு செய்துள்ளனர்.

இப்பகுதிகளை ஆய்வு செய்தபோது எண்ணெய் படலத்தை விரைந்து அகற்றவும் உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகளிடம் பெற்றுத்தரவும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிவாரண உதவிகளை உடனடியாக செய்து தருமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இனிமேலாவது மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும். உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையான நிவாரண உதவிகளை மீனவர்களுக்கு வழங்க வேண்டும். எண்ணெய் கழிவை கடலில் வெளியேற்றிய சிபிசிஎல் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x