Published : 24 Jan 2018 06:28 PM
Last Updated : 24 Jan 2018 06:28 PM
போக்குவரத்து போலீஸார் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதம் தொடர் சர்ச்சையாகி வருகிறது. போக்குவரத்து போலீஸாரின் நடவடிக்கையில் மாற்றம் வர என்னவிதமான நடவடிக்கை வேண்டும் என ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி பேட்டி அளித்துள்ளார்.
காவல்துறையில் பொதுமக்களிடம் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புள்ளவர்கள் போக்குவரத்து போலீஸார். சென்னையில் போக்குவரத்து போலீஸாரால் தாக்கப்படுவதும், மடக்கிப் பிடிக்கிறேன் என முயலும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் ஆங்காங்கே பல ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.
போக்குவரத்து காவல்துறை மக்களுக்கு வெயில் மழை பாராமல் சேவை ஆற்றி வருகிறது. மன அழுத்தம் மிக்க சாலையில் நிற்கும் பணி என்பதை மறுப்பதற்கில்லை. அதில் பணியாற்றும் பெரும்பாலான போலீஸார் சர்ச்சையில் சிக்குவதும் இல்லை. பொதுமக்களிடம் நல்ல உறவையும் பேணி வருகிறார்கள்.
ஆங்காங்கே ஒரு சிலர் செய்யும் தவறுகள், பொதுவாக பொதுமக்களிடம் தரக்குறைவாக மரியாதை இன்றி பேசுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிப் போகும் வாகன ஓட்டிகள் வாட்ஸ் அப்பில், முகநூலில் கொந்தளிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அம்பத்தூர் பாடி சாலையில், காலையில் ஜன சந்தடி மிக்க இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை திடீரென மடக்க அவர் திடீர் பிரேக் போட்டதில் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் உயிரிழந்தார்.
இதன் பின்னர் வாகன நெரிசல் மிக்க பீக் ஹவர்களில் வாகனங்களை மடக்கக் கூடாது என அப்போதைய ஆணையர் டி.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதே போல் விருகம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மடக்கிப் பிடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சாலைத் தடுப்பில் மோதி இளைஞர் உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸாரை தாக்கினர்.
சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் நிற்கவில்லை என்று போலீஸார் தடியால் தலையில் அடித்ததில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளைஞர் தலையில் பலத்த அடிபட்ட விவகாரம் சர்ச்சையானது.
சில நாட்களுக்கு முன் மேடவாக்கத்தில் வாலிபர் ஒருவரை போலீஸார் தாக்கியதில் அவர் போலீஸாரிடம் எப்படி என்னை அடிக்கலாம் என இளைஞர் ஆவேசமாக கேட்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலானது. இது போன்ற பல சம்பவங்கள் அடிக்கடி போலீஸாரின் அத்து மீறலை வெளிக்கொணர்கிறது.
போக்குவரத்து போலீஸாரால் காவல்துறை மீது மக்களுக்கு கோபம் இருப்பதை மறுப்பதற்கில்லை. போக்குவரத்து போலீஸார் பணிகளில் ஒன்று வாகன சோதனை. இவ்வாறு வாகன சோதனைகளில் சிக்குபவர்களை ஆவணங்களை சோதித்த பின்னர் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் அனுப்புவது என்பது நடைமுறையில் இல்லை. நூறு ரூபாயாவது அபராதம் கட்டி விட்டு செல் என்று நிர்பந்தப்படுத்துவது மிரட்டுவது என்பது வாடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்படி சிக்கும் இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வேன், கால் டாக்ஸி ஓட்டுநர்களிடம் போலீஸார் பேசும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது என்கிறார் ஆட்டோ ஓட்டுநர் நட்ராஜ் என்பவர்.
கல்லூரியில் படிக்கும் மாணவர் சதீஷ் கூறுகையில், ''தீடீரென வாகனத்தை பிடிப்பார்கள், ஒழுங்காக ஹெல்மெட் அணிந்து முறையான ஆவணங்கள் வைத்திருந்தாலும் மரியாதைக் குறைவாகப் பேசுவார்கள், டிரஸ், தலைமுடி பற்றி விமர்சிப்பார்கள். என் வீட்டில் கூட அப்படி திட்டு வாங்க மாட்டேன் அவ்வளவு மோசமாக வாடா போடா என்று பேசுவார்கள்.
அதிகம் பேசினால் ரேஸ் ஓட்டினாய் என்று உள்ளே போட்டுவிடுவேன் என்று மிரட்டுவார்கள். போலீஸார் மட்டுமல்ல ஆய்வாளர் அளவில் உள்ள அதிகாரியும் அப்படித்தான் பேசுவார். அப்போதுதான் எங்களுக்கு கோபமே வரும்'' என்று கூறினார்.
சென்னையில் வேன் ஓட்டிவரும் மூர்த்தி என்பவர் கூறும்போது, ''வெளிமாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காக வாந்து வாகனம் ஓட்டுகிறோம். வாகனத்தை மடக்கியவுடன் போலீஸார் ஒருமையில் வாடா போடா என்று பேசுவதும், அவதூறான வார்த்தைகளால் திட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
’என்ன சார் இப்படி பேசுகிறீர்கள்’ என்று கேட்டால் ’இதோ பார்றா சார் கலெக்டர். மரியாதையாக பேசச் சொல்கிறார்' என்று அதைவிட கேவலமாக பேசுவார்கள். எங்கள் வீட்டில் கூட இப்படி திட்டு வாங்கியதில்லையே இப்படி பிழைப்புக்காக திட்டு வாங்குகிறோமே என்று செத்து விடலாம் போல தோன்றும்.
இது போன்ற ஒரு முடிவைத்தான் அந்த கால்டாக்ஸி ஓட்டுநர் கண நேரத்தில் அவமானத்தால் முடிவெடுத்துள்ளார் என்று நினைக்கிறேன்'' என்று கூறினார்.
வயதுக்கு மரியாதை தரமாட்டார்கள் என 40 ஆண்டுகளாக லாரி ஓட்டிவரும் ஓட்டுநர் அலாவுதீன் என்பவர் கூறினார். ''எனக்கு 50 வயதுக்கு மேல் ஆகுது, என் வயதில் பாதி இருக்கும் அந்த காவலருக்கு. வண்டியை நிறுத்த சொன்னால் முறையாக நிறுத்துவோம், ஆனாலும் கீழே இறங்குடா, வாடா, போடா என்று ஒருமையில் பேசுவார்கள்.
அவர் வயதில் எனக்கு மகன் இருக்கிறான், இப்படி பேசும் போது ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டால் கூட கோபப்படுவார்கள் என்பதால் மனதில் வருத்தமுடன் ஆவணங்களை கொடுப்போம்'' என வருத்தமுடன் பகிர்ந்தார்.
இவற்றைத் தவிர்க்க என்ன விதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதியிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
தொடர்ச்சியாக போக்குவரத்து போலீஸாரின் நடத்தை பொதுமக்களிடையே கோபத்தை கிளப்பும் வகையில் உள்ளதே? இன்று கால் டாக்ஸி ஓட்டுநர் தீக்குளிப்பு சம்பவம் நடந்துள்ளது. இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
போக்குவரத்து போலீஸார் ஒட்டுமொத்தமாக பொதுமக்களிடம் கண்ணியக்குறைவாக நடப்பதில்லை. புல்லுருவிகள் போல் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன அறிவுரை கூறினாலும் அவர்கள் நிலையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இவர்களால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே நடக்கும் இது போன்ற அத்துமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டித்தால் தான் இது போன்ற அத்துமீறல்கள் குறையும். எங்கள் காலத்தில் நடவடிக்கைகள் கடுமையாக இருந்தன. உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுத்தோம். இப்போது யாரும் இது போன்ற பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதில்லை. நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகள் தயங்குகிறார்கள்.
போலீஸாருக்கு வழிகாட்ட என்ன முறை உள்ளது?
ஒரே வழி கவுன்சிலிங்தான். பயிற்சியின் போதும் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து கற்றுத்தரப்படுகிறது.
போக்குவரத்து போலீஸார் குற்றம் செய்யும் வாகன் ஓட்டிகளை தரக்குறைவாக பேசுவதாக புகார் வருகிறதே?
போக்குவரத்து போலீஸாருக்கு வகுப்புகளில் ஒரு முக்கியமான விஷயத்தை திரும்ப திரும்ப வலியுறுத்திச் சொல்கிறோம். கிரிமினல் குற்றவாளிகளை நடத்துவது போல் போக்குவரத்து விதிமீறுபவர்களை நடத்தக் கூடாது. அது சாதாரண வயலேஷன் தான். போக்குவரத்து விதியின் கீழ் குற்றம் செய்கிறார் அவ்வளவுதான்.
சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் எச்சரிக்கை, அல்லது அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும். பொதுமக்களை கிரிமினல்கள் போல் கையாளக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கிறோம். அதையே தான் வலியுறுத்திச் சொல்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT