Published : 17 Dec 2023 07:46 PM
Last Updated : 17 Dec 2023 07:46 PM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 149 நாட்களுக்கு பிறகு மீண்டும் 70 அடியை எட்டியது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், பருவமழை கை கொடுக்காததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. இதையடுத்து, அணையில் இருந்த பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி நிறுத்தப்பட்டது.
பின்னர், குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல் 500 கன அடியில் இருந்து 250 கன அடியாக குறைக்கப்பட்டது. கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு திறக்கவில்லை.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. அதன்படி, நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 2,753 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 1,978 கன அடியாக சற்று சரிந்துள்ளது. இருப்பினும், அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர் திறப்பு குறையாக உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 149 நாட்களுக்கு பிறகு மீண்டும் 70 அடியை எட்டியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT