Published : 17 Dec 2023 06:18 PM
Last Updated : 17 Dec 2023 06:18 PM

கோவில்பட்டியில் கொட்டி தீர்த்த மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவில்பட்டி பகுதியில் பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் இன்று (டிச.17) அதிகாலை முதல் பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் இன்று அதிகாலை 2 மணி முதல் சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் மதியம் 1.15 மணிக்கு மேல் கனமழையாக மாறியது. தொடர்ந்து மாலை 3 மணி வரை மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிவிட்டபடி சென்றன. கோவில்பட்டி பிரதான சாலையில் இளையரசனேந்தல் சாலை விலக்கு அருகே, மாதாங்கோவில் விலக்கு அருகே, அண்ணா பேருந்து நிலையம் முதல் தெஷ்ணவிநாயகர் கோயில் அருகே மற்றும் புதுரோடு சந்திப்பு, தினசரி சந்திப்பு சாலை பகுதி என சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், மார்கழி மாத பிறப்பு என்பதாலும் மக்கள் கோயிலுக்கு செல்வதில் ஆர்வம் காட்டினர். ஆனால், விடாது பெய்த மழையால் அவர்களால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதே போல், கழுகுமலை, கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயபுரம், எப்போதும்வென்றான், ஓட்டப்பிடாரம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை வரை மிதமாகவும், மதியத்துக்கு பின்னர் கன மழை பெய்தது.

கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் வரத்து அதிகமானதால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது.

மரம் சாய்ந்தது: பிரதான சாலையில், இலக்குமி ஆலை கீழ காலனி பகுதியில் உள்ள வேன் நிறுத்தும் இடத்தில் இருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான வாகை மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுந்தரராஜன், ரவி ஆகியோர் வேன்களின் முன் பக்க கண்ணாடிகள், இருக்கைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையிலான வீரர்கள் உடனடியாக மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

கோவில்பட்டி பிரதான சாலையோரம் இருந்த மரம் விழுந்ததில் வேன் சேதமடைந்தது. மீட்பு பணிகளில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.

சுரங்கப்பாதைகளை மழைநீர் சூழ்ந்தது: கோவில்பட்டியை பொருத்தவரை இளையரசனேந்தல் சாலை, இலக்குமி ஆலை அருகே, கிருஷ்ணா நகர் செல்லும் சாலை, இலுப்பையூரணி பகுதி ஆகிய இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழைநீர் வரத்து அதிகரித்தது. இதனால் இளையரசனேந்தல் சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மூடப்பட்டது. இதே போல், இலுப்பையூரணி, கிருஷ்ணா நகர் செல்லும் சாலை, இலக்குமி ஆலை அருகே ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அதிகளவு வந்ததால் மக்கள் மாற்று வழியாக சென்று வந்தனர். இதே போல், கடம்பூர் அருகே கோடங்கால் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகளவு இருந்ததால் மக்கள் மாற்று பாதை வழியாக சென்று வந்தனர்.

ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், குடிசை மாற்று வாரிய இடம் அருகே தடுப்பு சுவரில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெளியேறியது.

ஓடை உடைந்து வெளியேறிய தண்ணீர்: கதிரேசன் கோயில் மழைப்பகுதியில் மழைநீர் அங்குள்ள ஓடை வழியாக செண்பகவல்லி அம்பாள் கோயில் முன்புற உள்ள ஓடை வழியாக செல்லும். இந்த ஓடை அருகே குடிசை மாற்று வாரிய வீடுகள் பழமையானதால் இடித்து அகற்றப்பட்டு வெற்றிடமாக உள்ளன. இந்நிலையில் இன்று பெய்த மழையில், குடிசை மாற்று வாரிய இடத்தின் அருகே இருந்த கற்களாலான ஓடை தடுப்பு இடிந்து இருந்ததால் பெருக்கெடுத்து வந்த தண்ணீர் அதிலிருந்து வெளியேறிய தேங்கியது. இதனால் குடிசை மாற்று வாரிய இடம் குளம் போல் காட்சியளித்தது.

கோவில்பட்டி பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x