Published : 17 Dec 2023 05:41 AM
Last Updated : 17 Dec 2023 05:41 AM
சென்னை: தென்னிந்தியாவை `பாரதத்தின் கலாச்சார கோட்டை' என்று சொன்னால் மிகையாகாது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் தெரிவித்தார்.
சென்னையில் முதல்முறையாக ‘திருமுறை திருவிழா’ மற்றும் ‘மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண’ வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இம்பா சமூக அமைப்பு மற்றும் ஐபிஎன் வணிக நிறுவனம் சார்பில் ‘பன்னிரு திருமுறை திருவிழா’ மற்றும் ‘மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்’, நிகழ்வு சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வெகுவிமரிசையாக நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்தியபாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இம்பா நிறுவனர் ஆர்.அருணாச்சல முதலியார், பொருளாளர் அப்பு ஆர்.சந்திரசேகர் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம் உட்பட 10 ஆதீனங்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சருக்கு இம்பா சமூக அமைப்பினர் வெள்ளி வேல் வழங்கினர். தொடர்ந்து, காலை 8 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில், 108 சைவஓதுவா மூர்த்திகளின் திருமுறை இசை, 108 திருமுறை பேழை வழிபாடும், அதன்பிறகு மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெற்றது. பின்னர், நாதஸ்வர இசை, 100 மாணவர்களின் திருமுறை இசை பாடல், ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: மதுரையைச் சுற்றியுள்ள பகுதியை ஆண்ட பராக்கிரம பாண்டிய மன்னன் சிவன் கோயிலைக் கட்ட விரும்பினார். அதற்காக ஒரு லிங்கம் கொண்டு வருவதற்காக காசிக்குச் சென்றார். திரும்பி வரும்போது மரத்தடியில் ஓய்வெடுக்க நின்றார். ஆனால் அவர் தனது பயணத்தைத் தொடர முயன்றபோது, லிங்கத்தை ஏற்றிய வண்டி நகரவில்லை. பராக்கிரம பாண்டியர் இதை இறைவனின் கட்டளை என்று புரிந்து கொண்டு சிவகாசி என்று அழைக்கப்படும் லிங்கத்தை அங்கே நிறுவினார்.
காசிக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக பாண்டியர்கள் தென்காசியில் காசி விஸ்வநாதர் கோயிலை கட்டினர். மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் திருமணம் வெறும் புராண கதை அல்ல. இது ஆண் மற்றும் பெண்ஆற்றல்களின் தெய்வீக சங்கமத்தை பிரதிபலிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை விவரிக்க அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
காசி சிவபெருமானின் உறைவிடம். புனித ஜோதிர்லிங்கம் கோயில்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உறவு புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் காணப்படுகிறது. சமீபகாலமாக இந்திய கலாச்சார மற்றும் ஆன்மிக ஒற்றுமையின் அடிப்படை அம்சங்களை சவால் செய்யும் வகையில் ஓர்ஒருங்கிணைந்த பிரச்சாரம் உள்ளது.
இந்தியா ஒரு தேசம் அல்ல, தனித்துவமான மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்தை பரப்புகின்றனர். இந்தியாவின் தேசிய மற்றும் கலாச்சார அடையாளத்தின் இந்த தவறான பிரச்சாரம் வரலாற்று ரீதியாக தவறானது. நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை மோடி தீவிரமாக வலுப்படுத்துகிறார். பிரதமர் மோடியின்தலைமையின் கீழ், ஒட்டுமொத்த தேசமும் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஒன்றிணைக்கப்படுகிறது. தென்னிந்தியா நமதுஇந்தியப் பண்பாட்டைப் பாதுகாத்தவிதம் நிச்சயம் பாராட்டத்தக்கது. தென்னிந்தியாவை `பாரதத்தின் கலாச்சார கோட்டை' என்று சொன்னால் மிகையாகாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT