Published : 17 Dec 2023 05:51 AM
Last Updated : 17 Dec 2023 05:51 AM
சென்னை: அரசு பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் வேறு எந்தகட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா வண்ணான்குடிக்காடு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டியதை எதிர்த்து, அதேகிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 715 சதுர மீட்டர் நிலம் பள்ளிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,அந்த நிலமே போதுமானதாக இல்லை. தற்போது அந்த இடத்திலும் பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளதால், பள்ளிக்கும், அங்கு பயிலும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படும். எனவேஅந்த பள்ளிக்கு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டது.
அரசு தரப்பில், “அங்குள்ளபள்ளிக்கும் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஏற்கெனவே இயங்கி வந்த பஞ்சாயத்துஅலுவலகம் சிதிலமடைந்து இருந்ததால், பஞ்சாயத்து அலுவலகமும் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. எஞ்சிய இடம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்படும்” என விளக்கமளிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: பள்ளிக்கு புதிதாக கட்டிடம்கட்டப்பட்டு வரும் நிலையில், கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தை இடிக்க உத்தரவிடுவது முறையாக இருக்காது. அவ்வாறு உத்தரவிட்டால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படும்.
அதேநேரம், பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தால் மாணவர்களின் படிப்புக்கும், மாணவர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்பதை மாவட்ட நிர்வாகமும், பஞ்சாயத்து தலைவரும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அரசு பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளோ அல்லது அரசு அமைப்புகளோ வேறு எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது.
அத்துடன், பள்ளிகளுக்காக ஒதுக்கப்படும் நிலங்களில் இதுபோன்ற பிற கட்டிடங்களை கட்டுவதன் மூலம் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள், தேவைகள் கிடைக்காமல் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
அரசின் கொள்கைப்படி ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தபட்சமாக எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட வேண்டுமோ அந்த நிலத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும். அதில்வேறு யாரும் கை வைக்கக்கூடாது என்பதை அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT