Last Updated : 10 Jan, 2018 02:32 PM

 

Published : 10 Jan 2018 02:32 PM
Last Updated : 10 Jan 2018 02:32 PM

பீட்ஸா, பர்கர் சாப்பிடாதீர்கள்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், செவ்வாய்க்கிழமை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார் நடிகர் சிவகார்த்திகேயன். பள்ளி மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில், பீட்ஸா, பர்கர் சாப்பிடாதீர்கள். குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்துவிடுங்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் மாணவர்களிடையே பேசினார்.

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் பேசியதாவது:

''எனக்குப் பரிச்சயமான ஊர்தான் கோயம்புத்தூர். இங்கே உள்ள சிறையில் என் தந்தை, அதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது இந்த மைதானத்துக்கெல்லாம் பல முறை வந்திருக்கிறேன். இங்கே பேசுகிற கொங்கு தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த பாஷையில் திட்டினால் கூட, கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமையான பாஷை.

இப்போது இளைஞர்களிடையே 'ஒபிசிட்டி' எனும் பிரச்சினை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவப் பருவத்திலேயே ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் பிரச்சினை வந்துவிடுகிறது. அப்படி குண்டாக இருப்பவர்களை, குண்டா, தடியா என்றெல்லாம் கேலியாக அழைத்திருப்போம். நானும் அப்படி அழைத்திருக்கிறேன். பிறகு அதற்காக வருந்தியிருக்கிறேன். இனிமேல், குண்டாக இருக்கிற உங்கள் நண்பர்களை, அப்படியெல்லாம் சொல்லிக் கூப்பிடாதீர்கள்.

உங்களுக்கெல்லாம் பீட்ஸா, பர்கர் முதலான உணவுகள் பிடிக்கும் என்று தெரியும். ஆனால் அவை உடலுக்கு நல்லதல்ல. ஆகவே, பீட்ஸா, பர்கர் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். பாட்டிலில் அடைத்து விற்கப்படும் கூல்டிரிங்க் ஐட்டங்களையும் குடிக்காதீர்கள். நான் இதை நிறுத்தி ஏழெட்டு வருடங்களாகிவிட்டன. குளிர்பான விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதற்கு பதிலாக, இளநீர் குடியுங்கள். நுங்கு சாப்பிடுங்கள்.

பழங்கள் அல்லது காய்கறிகள் கொண்ட ஜூஸ் சாப்பிடுங்கள். வீடியோ கேம்ஸ் விளையாடுவதை நிறுத்திவிட்டு, மைதானத்தில் தினமும் ஒருமணி நேரம் விளையாடுங்கள். ஓடியாடி விளையாடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும். அப்படி நான் விளையாடி வருவதுதான், படத்தில் சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கும் பாடல் காட்சிகளில் ஆடுவதற்கும் உறுதுணையாக இருக்கிறது.

தினமும் இரண்டு பழங்கள் மற்றும் காய்கறி சாப்பிடுங்கள். அதேபோல் தினமும் 30 நிமிடங்கள், தொலைக்காட்சி பார்க்காமலும் செல்போன் பார்க்காமலும் இருப்பேன் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். சோடா கலந்த குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பானங்களைக் குடிக்காதீர்கள். தினமும் 8 மணி நேரம் தூங்குங்கள். இப்படியெல்லாம் இருந்து வந்தால், எதிர்காலத்தில் எவர் துணையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

நான் சுமாராகப் படிக்கிற மாணவனாகத்தான் இருந்தேன். ஆனால் சொன்னதைப் புரிந்து கொள்கிறவனாக, எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருந்தேன். தொலைக்காட்சியில் புகுந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த என்னை, சினிமாவில் அங்கீகரித்து, கதாநாயகனாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நீங்களும் உங்கள் சகோதரர்களும் உங்களின் பெற்றோர்களும்தான் காரணம்.

ரொம்ப சுமாரான மாணவனான நானே இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்கிறேன் என்றால், நீங்கள் ஆரோக்கியத்துடனும் கூடுதல் கவனத்துடனும் வளர்ந்து, படித்தீர்களென்றால் என்னை விட பல படிகள் முன்னேறமுடியும். ஆகவே திட்டமிட்டுப் படித்து முன்னேறுங்கள்.

எல்லோருக்கும் முக்கியமான விஷயம். உங்கள் பெற்றோரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் என் அம்மாவை அப்படித்தான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் பெற்றோரை நல்லவிதமாகப் பார்த்துக் கொண்டால், இந்த வாழ்க்கை உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். கடவுளும் சந்தோஷத்தைத் தருவார்.

'வேலைக்காரன்'  படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால், என்னுடைய காமெடி இல்லை என்று பலரும் சொன்னார்கள். அடுத்து சூரி அண்ணனும் நானும் சேர்ந்து படம் நடிக்கிறோம். அதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. முழுக்க முழுக்க நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் என முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும்'' என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x